

உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின்னர் முதல் சட்டமன்றக் கூட்டம் நடைபெற்று வருகிறது. முதல்நாளான நேற்று உ.பி.யில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற கோஷத்துடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். கவர்னர் பேசும்போது பேப்பர் பந்துகளை வீசி எறிந்தனர்.
இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் கூட்டம் தொடங்கியது. அப்போது, கேள்வி நேரத்தை நடத்த விடாமல் குறுக்கிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எடுத்தனர். குறிப்பாக, மதுராவில் நகைக்கடையில் இரண்டு பேரை கொன்றுவிடடு நகைகளை ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்ற விவகாரம் தொடர்பாக, பேச வேண்டும் என முழக்கமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எழுப்புவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால், காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் கேள்வி நேரத்தின்பொது பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மதுரா சம்பவத்தை அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், டிஜிபி-யிடம் விளக்கம் கேட்டிருப்பதாகவும் கூறினார். மேலும், டிஜிபி நாளை மதுரா சென்று விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறினார்.
‘சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் சிறிய தவறையும் அனுமதிக்க மாட்டோம். இந்த விஷயத்தில் வகுப்புவாத அல்லது சாதிய அடிப்படையிலான ஒரு சார்பான அணுகுமுறை இருக்காது. இந்த அரசு பொறுப்பேற்று முழுமையாக இரண்டு மாதங்கள்கூட ஆகவில்லை. ஒரு வருடம் போகட்டும். அதன்பிறகு சட்டம் ஒழுங்கு பற்றி கேள்வி எழுப்புங்கள்” என்றார்.