

ஊட்டி:
சமவெளிப்பகுதியில் வரலாறு காணாத கடும் வறட்சி நிலவி வருகிறது. கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் வாட்டி வதைத்தது. அனல் காற்றுடன் வெப்பம் தகித்து வருகிறது.
வெப்பத்தில் இருந்து தப்பிக்க மலைகளின் அரசியான நீலகிரிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் கோடை விழாவை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர் பகுதிகளில் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இடி- மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக துமனட்டி, கப்பச்சி, கொடுமுடி, தூனேரி ஆகிய பகுதிகளில் அதிக அளவு மழை பெய்தது.
ரோஜா கண்காட்சி தொடங்கிய நிலையில் விடிய விடிய பெய்த மழை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் கோடை விழாவை அனுபவித்து வருகிறார்கள்.
தேயிலை, கேரட், பீன்ஸ், உருளைக்கிழக்கு சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதேபோன்று வால்பாறையில் இன்று அதிகாலை 3.30 மணியில் இருந்து 4.30 மணி வரை கனமழை பெய்தது. கடும் வெயிலுக்கு இடையே கோடை மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.