

பாட்னா:
பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.
இதில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜனதா கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதியிலும், பா.ஜனதா 17 இடங்களிலும் வெற்றி பெற்றன. அந்த கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி 6 தொகுதியில் வெற்றி பெற்றது.
மத்திய மந்திரி சபையில் கூட்டணி கட்சிகளுக்கு ஒரு இடம் வழங்க பா.ஜனதா முடிவு செய்து இருந்தது. அதன்படி சிவசேனா, லோக் ஜன சக்தி, அபனா தளம் ஆகிய கட்சிகளுக்கு மந்திரி பதவி கிடைத்தன.
ஐக்கிய ஜனதா தளம் 2 மந்திரி பதவி கேட்டது ஆனால் ஒரு மந்திரி பதவி மட்டுமே வழங்குவதாக தெரிவித்ததால் அந்த கட்சி மந்திரி சபையில் இடம் பெறவில்லை. நிதிஷ்குமாரும் மத்திய மந்திரி சபை பதவி ஏற்பு நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டு அதிருப்தியுடன் டெல்லியில் இருந்து பாட்னா திரும்பினார்.
இந்த நிலையில் பீகாரில் மோடிக்காக ஓட்டு விழவில்லை என்று அம்மாநில முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அடைந்த வெற்றி குறித்து யாரும் குழப்பம் அடைய கூடாது. இது பீகார் மக்களுக்கான வெற்றி. யாராவது இதை தன் சொந்த வெற்றி என்று கருதினால் அது தவறானது. எந்த ஒரு ஆளுமையின் (மோடி) பெயரினிலும் பீகாரில் ஓட்டுகள் கிடைக்கவில்லை.
மோடி மந்திரி சபையில் நாங்கள் ஒரு போதும் சேர மாட்டோம். எதிர்காலத்திலும் இதே நிலைதான். ஆனால் பா.ஜனதா கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம்.
கட்சிகளின் எம்.பி. எண்ணிக்கைக்கு ஏற்ப மந்திரி பதவி அளிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அடையாள பிரநிதித்துவம் தேவையில்லை.
இவ்வாறு நிதிஷ்குமார் கூறியுள்ளார்.