

புதுடெல்லி:
மத்திய மந்திரி சபையை பிரதமர் மோடி மாற்றி அமைத்தது, அர்த்தம் இல்லாத நடவடிக்கை என்று காங்கிரஸ் கிண்டல் செய்து உள்ளது.
பிரதமர் மோடி மத்திய மந்திரிசபையை நேற்று மாற்றி அமைத்தார். புதிதாக 9 மந்திரிகள் பதவி ஏற்றனர். பல மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றப்பட்டன.
இதுபற்றி விமர்சனம் செய்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுஷ்மிதா தேப் தனது டுவிட்டர் பதிவில், “மத்திய மந்திரிசபையை பிரதமர் மாற்றி அமைத்தது அர்த்தமற்ற நடவடிக்கை ஆகும். பிரதமர் அலுவலகம் அனைத்து அமைச்சகங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தொடரும். மோகன் பகவத் (ஆர்.எஸ்.எஸ். தலைவர்) தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். இவை இரண்டுமே தோல்வியைத்தான் காணும்” என்று கிண்டலாக குறிப்பிட்டார்.
காங்கிரசின் இன்னொரு செய்தித் தொடர்பாளரான மணிஷ் திவாரி, மத்திய மந்திரியாக அனந்த்குமார் ஹெக்டே நியமிக்கப்பட்டது குறித்து நிருபர்களிடம் கூறுகையில், “மோடியின் மந்திரிசபையில் புதிதாக இடம் பிடித்து இருக்கும் அனந்த்குமார் ஹெக்டே டாக்டர்களை அடித்தவர். எனவே அவருக்கு சுகாதாரத்துறையை பிரதமர் ஒதுக்கி இருக்கலாம்” என்று கேலியாக கூறினார்.
காங்கிரஸ் தலைவர் சஞ்சய் ஷா கூறும்போது, “திறமையற்ற ஒருவருக்காக இன்னொரு திறமையற்றவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதனால் எந்த பலனும் கிடைக்கப்போவது இல்லை” என்றார்.
இதற்கிடையே, நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் மத்திய மந்திரிசபையில் சேர்க்கப்படாதது குறித்து, ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் லாலுபிரசாத் கடுமையாக தாக்கி உள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “மந்திரிசபையில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஐக்கிய ஜனதாதளத்தின் பல எம்.பி.க்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் யாரையும் பதவி ஏற்க பிரதமர் அழைக்கவில்லை. 2010-ம் ஆண்டு பாட்னா நகரில் பா.ஜனதா தலைவர்களுக்கு நிதிஷ்குமார் விருந்தளிப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அதை அவர் ரத்து செய்துவிட்டார். அதற்கு இப்போது மோடி சரியாக பழிவாங்கி விட்டார். இதுபோன்ற அவமானங்களை பா.ஜனதாவிடம் இருந்து நிதிஷ்குமார் இன்னும் நிறைய சந்திப்பார்” என்று குறிப்பிட்டார்.