நேரு பூங்கா-சென்டிரல் இடையேயான மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது

நேரு பூங்கா-சென்டிரல் இடையேயான சுரங்க வழித்தடத்தில் 2½ கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. #MetroTrain
நேரு பூங்கா-சென்டிரல் இடையேயான சுரங்க வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடந்தபோது எடுத்த படம்.
நேரு பூங்கா-சென்டிரல் இடையேயான சுரங்க வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

சென்னை:

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவொற்றியூர் விம்கோ நகர்-விமான நிலையம், சென்னை சென்டிரல்-பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்த 2 வழித்தடங்களிலும், விமான நிலையம்-சின்னமலை, விமான நிலையம்-நேரு பூங்கா, ஆலந்தூர்-பரங்கிமலை இடையே பணிகள் நிறைவடைந்து மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. விம்கோ நகர்-விமான நிலையம் இடையேயான வழித்தடத்தில் 11 இடங்களில் சுரங்கப்பாதையும், 6 இடங்களில் உயர் மட்ட பாதையிலும் ரெயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.

இதில், மேதின பூங்கா-தேனாம்பேட்டை இடையிலான சுரங்கப்பாதை தோண்டும் பணி கடந்த டிசம்பர் மாதம் முடிந்தது. அதோடு, சென்னை மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி அனைத்தும் முடிவுக்கு வந்தது. இதையடுத்து சென்டிரல்-பரங்கிமலை வழித்தடத்தில் உள்ள நேரு பூங்கா-சென்டிரல் இடையே மார்ச் மாதம் முதல் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், நேரு பூங்கா-சென்னை சென்டிரல் இடையேயான 2½ கி.மீ. தூர சுரங்க வழித்தடத்தில் நேற்று மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது, மெட்ரோ ரெயில் தண்டவாளம், மின்மயமாக்கல் பணிகள் நிறைவு செய்யப்பட்டிருப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல இறுதிக்கட்ட பணிகள் மற்றும் அது தொடர்பான சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், நேரு பூங்கா- சென்னை சென்டிரல் இடையேயான பணிகள் நிறைவு பெற்றதன் மூலம் 2-ம் வழித்தடம் (சென்னை சென்டிரல்- பரங்கிமலை) முழுவதும் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளதாகவும் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்தனர். பல்வேறு கட்ட சோதனைகள் நிறைவு பெற்ற பின்னர், பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு நடத்த உள்ளார்.

இதையடுத்து திட்டமிட்டபடி மார்ச் மாதம் முதல் பரங்கிமலை, சின்னமலை மற்றும் விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சென்டிரல் வரையிலும் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என்று தெரிகிறது. இதன்மூலம் சென்டிரலில் இருந்து ரெயில் பயணிகள் நேரடியாக விமான நிலையத்துக்கும், விமான நிலையத்தில் இருந்து பயணிகள் நேரடியாக சென்டிரலுக்கும் விரைவாக செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #Tamilnews

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com