

பீகாரில் 2 பெண்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு 13 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் ஜார்கண்ட்டை சேர்ந்தவர்கள் ஆவர். உறவினர்களான இவர்கள் தங்களின் பிழைப்பிற்காகப் பீகார் தலைநகர் பாட்னாவின் மிதாபூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி, கலை நிகழ்ச்சிகளில் நடனமாடி வந்துள்ளனர்.
நௌபத்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற திருமணச் விழாவில் நடனமாடுவதற்காக இவர்களை முன்னா குமார் என்ற நபர் கடந்த ஜூன் 18 அன்று அழைத்துள்ளார்.
ஆனால் பெண்களை நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, முன்னா குமாரின் ஆட்கள் அவர்களை ஆள்நடமாட்டமில்லாத பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளனர்.
அங்கு துப்பாக்கி முனையில் மிரட்டி, அங்கிருந்த 13 பேர் கொண்ட கும்பல் அவர்களை இரவு முழுவதும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. மேலும் எதிர்ப்பு தெரிவித்த அவர்களை கொடூரமாக தாக்கியும் உள்ளது.
மறுநாள் காலையில், பெண்களை ஏற்றிக்கொண்டு அந்தக் கும்பலின் வாகனம் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது தங்களை காப்பாற்றுமாறு அப்பெண்கள் இருவரும் சத்தமாக கூச்சலிட்டுள்ளனர்.
இதைக் கவனித்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து பெண்களை மீட்டனர். முதற்கட்டமாக 13 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னா குமார், சூரஜ் குமார், பானு குமார் ஆகிய மூன்று குற்றவாளிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
தப்பியோடிய மீதமுள்ள 10 பேரைத் தேடிக் கைது செய்யக் காவல் துறை சார்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.