

கேரளம் மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாவக்காடு பகுதியை சேர்ந்தவர் இப்ராகீம். உணவு விநியோக முகவரான இவர் அக்குபஞ்சர் சிகிச்சையும் அளித்து வந்தார். இவரது மனைவி முஹ்சீனா (வயது 37). 6 குழந்தைகளுக்கு தாயான இவர், 7-வது முறையாக கர்ப்பம் அடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் வீட்டிலேயே பிரசவித்தார். அப்போதே தாயும், பிறந்த குழந்தையும் உடல் நலம் குன்றி இருந்தனர். இந்த நிலையில் பிறந்த 6-வது நாளில் குழந்தை பரிதாபமாக இறந்தது.
இந்த நிலையில் சில நாட்களில் முஹ்சீனாவின் உடல்நலமும் அதிக பாதிப்பை சந்தித்தது. இதனை தொடர்ந்து அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார். இந்த சம்பவம் உறவினர்களிடம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் முஹ்சீனா சாவுக்கு அவரது கணவர் மீது உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
பிரசவத்திற்கு பிறகு அவருக்கு சரியான சிகிச்சை தராமல் அக்குபஞ்சர் சிகிச்சையை இப்ராகிம் அளித்ததாகவும், இதனால் முஹ்சீனா உடலில் காயங்கள் ஏற்பட்டதாகவும் புகாரில் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் முஹ்சீனாவை பார்க்க அவரது பெற்றோரை கூட கணவர் அனுமதிக்கவில்லை என்றும் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சாவக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முஹ்சீனா 7 முறை பிரசவித்த போதும், அதில் 4 குழந்தைகள் மட்டுமே உள்ளனர். 3 வயது மகள் கடந்த ஆண்டு இருதய நோயால் இறந்ததும், ஒரு குழந்தை கரு கலைப்பிலும், மற்றொரு குழந்தை பிரசவத்திலும் இறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.