கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை செலுத்தி கணவரை கொன்ற பெண் - அதிர்ச்சி சம்பவம்

கொலை திட்டத்தை செயல்படுத்த வெங்கட சாய் என்பவரின் உதவியை நாடினர்.
கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை செலுத்தி கணவரை கொன்ற பெண் - அதிர்ச்சி சம்பவம்
Published on

தெலங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில், மனைவி ஒருவர் மருத்துவ சிகிச்சையில் இருந்த தனது கணவருக்கு குழாய் வழியாக கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை செலுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கணவனை மனைவி கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

வளைகுடா நாட்டில் பணிபுரிந்து வந்த தனது மகன் பிரசாந்த் (35) ஜூன் 30-ஆம் தேதியன்று உயிரிழந்த தகவல் தனக்கு தெரிந்ததாக, அவரது தாயார் ஜூலை 01-ஆம் தேதியன்று புகார் அளித்தார். தனது மகன் ஊருக்கு வந்திருந்ததோ அல்லது அவரது இறப்புக்கு முந்தைய நிகழ்வுகளோ தனக்குத் தெரியாது என்று அப்பெண் காவல்துறையிடம் கூறினார்.

கள்ளத்தொடர்பு:

தனது மகனின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறிய அவர், தனது மருமகள் சந்தியா மீது சந்தேகம் எழுப்பினார். காவல்துறை விசாரணையில் கிடைத்த தொழில்நுட்ப ஆதாரங்களின்படி, சந்தியா (32) என்பவர் அனில் (35) என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது.

தங்கள் கள்ளத்தொடர்புக்கு பிரசாந்த் தடையாக இருப்பதாக கருதிய சந்தியாவும் அனிலும் அவரைக் கொல்லத் திட்டமிட்டதாகக் காவல்துறை அறிக்கை தெரிவித்தது. அவர்கள் தீட்டிய சதியின்படி, பிரசாந்தை கொல்லும் திட்டத்தை செயல்படுத்த வெங்கட சாய் என்பவரின் உதவியை நாடினர்.

சதித்திட்டம்:

திட்டத்தின்படி, ஜூன் 29 அன்று பிரசாந்தின் வீட்டுக்கு சென்ற சாய், அவரை அதிக அளவில் மது அருந்த செய்தார். பின்னர், பிரசாந்தை கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று, தொலைபேசி மூலம் சந்தியா கொடுத்த அறிவுறுத்தலின்படி அவரை கீழே தள்ளிவிட்டார் என்று அந்த அறிக்கை கூறியது.

இருப்பினும், பிரசாந்த் பலத்த காயமடைந்தாரே தவிர உயிரிழக்கவில்லை. சந்தியாவும் சாயும் பிரசாந்தைச் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றிய அவர்கள், இறுதியில் வீட்டிற்கே அழைத்து வந்தனர்.

உயிரிழப்பு:

அனிலின் தூண்டுதலின் பேரில், சந்தியா குழாய் வழியாக பிரசாந்துக்கு கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தையும் மயக்க மருந்தையும் செலுத்தினார். மேலும், கட்டிலில் இருந்து பிரசாந்தைக் கீழே தள்ளியதால் அவர் உயிரிழந்தார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்களாகவே தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும், நீதிமன்றம் அவர்களைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டதாகவும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com