குண்டாக இருந்தால்தான் அழகாக இருப்ப... தயிர் சாப்பிட சொன்னதால் மனைவி ஓட்டம்- போலீசில் கணவர் புலம்பல்

தம்பதிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மனைவி ஒல்லியாக இருப்பது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை.
குண்டாக இருந்தால்தான் அழகாக இருப்ப... தயிர் சாப்பிட சொன்னதால் மனைவி ஓட்டம்- போலீசில் கணவர் புலம்பல்
Published on

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் குக்கட் பள்ளி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கணவன், மனைவி வசித்து வருகின்றனர். தம்பதிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மனைவி ஒல்லியாக இருப்பது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை.

ஒல்லியாக உள்ள மனைவி குண்டாக மாறுவது குறித்து சமூக வலைதளங்களில் பார்த்தார். அதில் தயிர் சாப்பிட்டால் உடல் பருமனாகும் என பதிவிடப்பட்டிருந்தது. மனைவியிடம் குண்டாக இருந்தால் தான் அழகாக இருப்ப. தினமும் தயிர் சாப்பிட வேண்டும் என தெரிவித்தார். ஆனால் அவரது மனைவிக்கு பால், தயிர் உள்ளிட்ட பால் பொருட்கள் அறவே பிடிக்காது.

தொடர்ந்து மனைவியை தயிர் சாப்பிட வலியுறுத்தி வந்தார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவர் வேலைக்கு சென்று இருந்த போது அவரது மனைவி வீட்டை விட்டு வெளியேறினார்.

அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தர வேண்டுமென குக்கட் பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தயிர் சாப்பிட சொன்னதால் மனைவி வீட்டை விட்டு வெளியேறியதாக கணவர் புலம்பினார். விசித்திரமான இந்த சம்பவத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com