

ஏப்ரல் 29 அன்று நடைபெற்ற மேற்கு வங்க சட்டசபை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது நடந்த முறைகேடுகள் காரணமாக, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஃபால்டா தொகுதிக்கு தேர்தல் ஆணையம் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஃபால்டா தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முந்தைய வாக்குப்பதிவை ரத்து செய்து, புதிய தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் ஏப்ரல் 29 அன்று ஃபால்டா தொகுதியில் உள்ள அனைத்து 285 வாக்குச்சாவடிகளிலும்நடந்த வாக்குப்பதிவு செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்பின்படி ஃபால்டா தொகுதிக்கு மே 21 அன்று மறுதேர்தல் நடைபெறும்.
மேற்கு வங்கத்தின் மற்ற 293 தொகுதிகளுக்கும் மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஆனால், ஃபால்டா தொகுதிக்கு மட்டும் மே 24 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புகாரின்படி, அங்கு ஏப்ரல் 29 அன்று பல வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டிருந்தன. நெட்வொர்க் சிக்கல்கள் காரணமாக கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல்கள் சேரவில்லை.
பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் சில பகுதிகள் டேப் கொண்டு ஒட்டப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இதைதொடர்ந்து தேர்தலின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய மறுதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று டயமண்ட் ஹார்பர் மற்றும் மக்ராஹத் (மேற்கு) ஆகிய தொகுதிகளில் உள்ள 15 பூத்களில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.