

மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரெயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி இன்று அறிவித்துள்ளார்.
இந்த திட்டங்களுக்கு தேவையான நிலங்களை எப்போது ஒப்படைக்க முடியும் என்பது குறித்த தெளிவான கால அட்டவணையை தயாரிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ஆகியோர் பங்கேற்ற ரெயில்வே திட்டங்கள் குறித்த உயர்நிலைக் கலந்தாய்வுக் கூட்டம் இன்று 'நபன்னா சபாகர்' அரங்கில் நடைபெற்றது.
மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி குறித்துப் பேசிய முதல்வர், "மேற்கு வங்கத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் ரெயில்வே வரைபடத்தில் இணைக்கப்படும்.
இந்த விரிவான ரெயில்வே விரிவாக்கத் திட்டங்கள் மூலம் சாமானிய மக்கள் பெரும் பயனடைவதோடு, மாநிலத்தின் போக்குவரத்துத் தொடர்பும் கணிசமாக உயரும்" என்று உறுதியளித்தார்.
ரெயில்வே திட்டங்கள் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் முடங்குவதைத் தடுக்க முதல்வர் ஒரு முக்கிய உத்தியைக் கையாண்டுள்ளார்.
அதன்படி, எந்தெந்த திட்டங்களுக்கு எப்போது நிலம் ஒப்படைக்கப்படும் என்ற துல்லியமான காலக்கெடுவை மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக வகுத்துச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேற்கு வங்க அரசின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சியை மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மனதார வரவேற்றுள்ளார்.
அவர் பேசுகையில், "நிலம் கையகப்படுத்துதல் மற்றும் அனுமதிகள் வழங்குவதில் மாநில அரசு அளிக்கும் இந்த முழு ஒத்துழைப்பு, திட்டங்களை மிக வேகமாக முடிக்க உதவும்.
குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற மத்திய ரயில்வே அமைச்சகம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.