மேற்கு வங்காளத்தில் 2-வது கட்ட தேர்தல்: 142 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

தலைநகரான கொல்கத்தாவில் அதிகபட்சமாக 27,300 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் 2-வது கட்ட தேர்தல்: 142 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
Published on

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு முதல் கட்டமாக 152 இடங்களுக்கு கடந்த 23-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

16 மாவட்டங்களில் நடைபெற்ற இந்த தேர்தலில் வரலாறு காணாத அளவில் 93.19 சதவீத ஓட்டுப்பதிவாகி இருந்தது. 3.61 கோடி வாக்காளர்களில் 3.36 கோடி பேர் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள்.

எஞ்சிய 142 தொகுதிகளுக்கான 2-வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை (29-ந் தேதி) நடைபெறுகிறது.

9 மாவட்டங்களில் நடைபெறும் இந்த தேர்தலில் 3 கோடியே 21 லட்சத்து 73 ஆயிரத்து 837 பேர் வாக்களிக்க (ஆண்கள் 1.64 கோடி, பெண்கள் 1.57 கோடி, 3- ம் பாலினத்தவர் 792) தகுதியானவர்கள்.

இவர்கள் வாக்களிக்க 41,001 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி (பவானிபூர்) உள்பட மொத்தம் 1,448 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களத்தில் உள்ளனர். முதல்கட்ட வாக்குப்பதிவின்போது பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் நிகழவில்லை.

ஆங்காங்கே அரசியல் கட்சிகளிடையே மோதல்கள் நிகழ்ந்தன. வாக்காளர்கள் மிரட்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. முதல்கட்ட வாக்குப்பதிவின்போது வன்முறை, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பல புகார் அளிக்கப்பட்டன. இதையொட்டி 2-வது கட்ட வாக்குப்பதிவுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் வீட்டில் இருந்து 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பா.ஜ.க. வேட்பாளர் வீடு அருகேயும் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்த்தப்பட்டது. இதன் காரணமாக தேர்தல் ஆணையம் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தி உள்ளது.

2,321 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். சுமார் 2.32 லட்சம் பாதுகாப்பு படையினர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தலைநகரான கொல்கத்தாவில் அதிகபட்சமாக 27,300 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். பதற்றமான வாக்குசாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

142 தேர்தல் பார்வையாளர்களும், 95 போலீஸ் கண்காணிப்பு அதிகாரிகளும், செலவின அதிகாரிகள் 100 பேரும் தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுகிறார்கள்.

2-வது கட்ட வாக்குப்பதிவிற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. இதையொட்டி தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி, அமித்ஷா, மம்தா பானர்ஜி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் இறுதிகட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்காளத்தில் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மம்தா பானர்ஜி தொடர்ந்து 4-வது முறையாக முதல்-மந்திரியாக வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளார். அவருக்கு பா.ஜ.க. கடும் போட்டியாக உள்ளது.

மேலும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. அங்கு 4 முனை போட்டி இருந்தாலும் திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜ.க. இடையேதான் நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com