

மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 294 சட்டசபை தொகுதிகளில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இன்று முதல்கட்டமாக 152 தொகுதிகளிலும், 29-ந்தேதி இரண்டாம் கட்டத்தில் 142 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கிறது.
152 தொகுதிகளில் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி (நந்திகிராம்), முன்னாள் மத்திய மந்திரி நிசித் பிரமாணிக் (மாதாபங்கா), மாநில மந்திரி உதயன் குஹா (தின்ஹடா), காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி (பஹராம்பூர்) ஆகியோர் முக்கியமான வேட்பாளர்கள் ஆவர்.
இந்நிலையில் முதல்கட்டமாக 152 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
முதல்கட்ட தேர்தலில் வாக்களிக்க 3 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 1 கோடியே 84 லட்சம் பேர் ஆண்கள், 1 கோடியே 75 லட்சம் பேர் பெண்கள், 465 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.
தேர்தலில், 2 ஆயிரத்து 450 கம்பெனி (2 லட்சத்து 50 ஆயிரம்) துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து தொகுதிகளும் மிகுந்த கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.