

மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 294 சட்டசபை தொகுதிகளில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. நாளை முதல்கட்டமாக 152 தொகுதிகளிலும், 29-ந்தேதி இரண்டாம் கட்டத்தில் 142 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கிறது.
முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ள 152 தொகுதிகளில் கடந்த சில நாட்களாக அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வந்தது. பிரசாரம் நேற்று மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, டார்ஜிலிங் மாவட்டத்தில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜி ஆகியோரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 152 தொகுதிகள், வடக்கு வங்காளத்திலும், தென்பகுதியில் சில மாவட்டங்களிலும் அமைந்துள்ளன.
முதல்கட்ட தேர்தலில் வாக்களிக்க 3 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 1 கோடியே 84 லட்சம் பேர் ஆண்கள், 1 கோடியே 75 லட்சம் பேர் பெண்கள், 465 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.
2 ஆயிரத்து 450 கம்பெனி (2 லட்சத்து 50 ஆயிரம்) துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மால்டா, முர்ஷிதாபாத், உத்தர் தினாஜ்பூர், கூச்பேகர், பிர்பும், புர்த்வான் ஆகிய மாவட்டங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அங்குள்ள அனைத்து தொகுதிகளும் மிகுந்த கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
சமீபத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் சுமார் 91 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே கடுமையான வார்த்தைப்போர் நடந்தது.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், அசைவ உணவுக்கு தடை விதித்து விடுவார்கள் என்று மம்தா பானர்ஜி பிரசாரம் செய்தார். அதற்கு பா.ஜ.க. மறுப்பு தெரிவித்தது.
இந்த பரபரப்புக்கு இடையே 152 தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.
எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி (நந்திகிராம்). முன்னாள் மத்திய மந்திரி நிசித் பிரமாணிக் (மாதாபங்கா), மாநில மந் திரி உதயன் குஹா (தின்ஹடா). காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி (பஹராம்பூர்) ஆகியோர் முக்கியமான வேட்பாளர்கள் ஆவர்.