கேரள மாநிலம் வயநாடு அருகே நடைபெற்று வரும் அனக்கம்பொயில் - கல்லாடி - மேப்பாடி சுரங்கப்பாதை திட்ட கட்டுமான பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
மண்ணில் புதைந்தவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 4 மணி நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
வயநாடு மற்றும் மலப்புறம் மாவட்டங்களை இணைக்கும் வகையில் கேரளாவின் மிக நீளமான இரட்டைச் சுரங்கப்பாதை சாலை திட்டப் பணிகள் கல்லாடி பகுதியில் நடைபெற்று வருகின்றன.
நேற்று இரவு முதல் பெய்து வரும் மிகக் கடுமையான மழை காரணமாக, இன்று அதிகாலை கல்லாடியில் உள்ள மீனாட்சி பாலம் அருகே திடீரெனப் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. சுரங்கப்பாதைக்காக வெட்டி குவிக்கப்பட்டிருந்த மண் குன்று சரிந்து விழுந்ததில் இந்த விபத்து நடந்துள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட உடனேயே தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்புகள் மற்றும் கட்டுமானப் பகுதி சேற்றில் புதைந்தது.
முதற்கட்டமாக மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் இருந்து உடல்களை மீட்ட நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. மேலும் காயமடைந்த 9 பேர் மீட்கப்பட்டு மேப்பாடியில் உள்ள விம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் சுரங்கப்பாதை கட்டுமானப் பணியை மேற்பார்வையிட்டு வந்த மூத்த அதிகாரிகள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் உட்படச் சிலர் இன்னும் மண்ணுக்குள் சிக்கி மாயமாகி இருப்பதாக அஞ்சப்படுகிறது. கட்டுமான நிறுவனத்தின் பணியாளர்கள் பட்டியலை வைத்து காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை மாவட்ட நிர்வாகம் சரிபார்த்து வருகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்புத் துறையினர், உள்ளூர் காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் இடிபாடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அடர்ந்த சேறு காரணமாக, கனரக இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் மீட்புக் குழுவினருக்குப் பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளன.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும், தற்காலிக நிவாரண முகாம்களுக்கும் மாற்றப்பட்டு வருகின்றனர்.
இந்தத் துயரச் செய்திக்கு வயநாடு நாடாளுமன்றத் தொகுதி எம்பி பிரியங்கா காந்தி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆறுதலைத் தெரிவித்துள்ள அவர், மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் உள்ளூர் நிர்வாகமும் முழு வீச்சில் ஈடுபட்டு வருவதைக் குறிப்பிட்டுள்ளார்.