

தேர்தலில் அனைவரும் வாக்கு செலுத்துவதை கட்டாயமாக்க வேண்டும், இல்லையென்றால் அபராதம் உள்ளிட்ட தண்டனைகளை வழங்க வேண்டும் என அஜய் கோயல் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய் மால்யா பக்சி, விபுல் எம்.பாஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
இதுகுறித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியதாவது, "இது கொள்கை முடிவு சார்ந்தது. நீதித்துறை இதில் உத்தரவிட முடியாது. நாம் ஜனநாயக நாடு. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கு விழிப்புணர்வு தான் தேவை. ஆனால் ஒருசிலர் போகக்கூடாது என்று நினைத்தால் அவர்களை நாம் வற்புறுத்த முடியாது.
வாக்களிக்காமல் இருப்பவர்களை கைது செய்ய உத்தரவிட வேண்டுமா? அதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. நீதிபதிகள் உட்பட பலருக்கு அந்த நாளில் பணிகள் இருக்கும். ஒரு ஏழை, தான் வேலைக்கு சென்றால்தான் சம்பளம் கிடைக்கும். அவரை நாம் என்ன சொல்ல முடியும்" என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.