

மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் இருந்து சோலாப்பூர் நோக்கி புறப்பட்ட வந்தே பாரத் பிரீமியம் ஏ.சி. ரெயில் (வண்டி எண்: 22225), நேற்று இரவு 7.30 மணியளவில் புனே ரெயில் நிலையத்தை நெருங்கியது. அப்போது, பிளாட்பாரத்திற்கு அருகே உள்ள தண்டவாள இணைப்பில் (டைமண்ட் கிராசிங் ரெயிலின் ஒரு பெட்டியின் சக்கரம் திடீரென தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டது. ரெயில் மெதுவான வேகத்தில் சென்று கொண்டிருந்ததால், ரெயிலில் இருந்த பயணிகளுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்தை தொடர்ந்து, பயணிகள் தங்கள் உடைமைகளுடன் ரெயிலில் இருந்து இறங்கி அருகில் இருந்த பிளாட்பாரத்திற்கு நடந்து சென்றனர்.
இந்த விபத்து காரணமாக அந்த பாதையில் சிறிது நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக விபத்துக்கு காரணமான டைமண்ட் கிராசிங் மாற்றப்படுவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். டைமண்ட் கிராசிங் என்பது 2 தண்டவாளங்கள் ஒரே இடத்தில் ஒன்றையொன்று வெட்டிக்கொண்டு செல்வதை குறிக்கிறது.
இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாக கருதப்படும் நிலையில், முதல் முறையாக தடம் புரண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.