என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன் - அமெரிக்க துணை அதிபர்
    X

    இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன் - அமெரிக்க துணை அதிபர்

    • ஜே.டி.வான்சுடன் அவருடைய மனைவி உஷா வான்ஸ், குழந்தைகள் இவான், விவேக், மிராபெல் மற்றும் உயர் அதிகாரிகள் வந்திருந்தனர்.
    • நீங்கள் நேர்த்தியாகவும், அக்கறையுடனும் ஒரு அழகான கோவிலை கட்டியது இந்தியாவுக்கு ஒரு பெருமை.

    டொனால்டு டிரம்ப் 2-வது முறையாக அமெரிக்க அதிபர் ஆனதைத் தொடர்ந்து இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தங்களில் பல முன்னெடுப்பு பணிகள் நடந்துள்ளன. புதிய முயற்சிகள் பலவும் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்தநிலையில் அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் 4 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். ஜே.டி.வான்சுடன் அவருடைய மனைவி உஷா வான்ஸ், குழந்தைகள் இவான், விவேக், மிராபெல் மற்றும் உயர் அதிகாரிகள் வந்திருந்தனர்.

    பின்னர் அவர்கள் டெல்லியின் பிரதிபலிப்பான அக்சர்தாம் கோவிலுக்கு சென்றனர். பல ஏக்கர் பரப்பளவுள்ள அழகான அந்த கோவிலை அவர்கள் சுற்றிப்பார்த்து சாமி தரிசனம் செய்தனர். அக்சர்தாம் கோவில் ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினரை வெகுவாக கவர்ந்தது.

    இதனை அவர் வருகைப்பதிவேட்டில் குறிப்பிட்டபோது, "இந்த அழகான இடத்துக்கு என்னையும், குடும்பத்தினரையும் வரவேற்ற உங்களது விருந்தோம்பல் மற்றும் கருணைக்கு மிக்க நன்றி. நீங்கள் நேர்த்தியாகவும், அக்கறையுடனும் ஒரு அழகான கோவிலை கட்டியது இந்தியாவுக்கு ஒரு பெருமை. என் குழந்தைகள் அதனை மிகவும் விரும்பினர்" என கூறியுள்ளார்.

    இதனைத்தொடர்ந்து ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினர், டெல்லி ஜன்பத் பகுதியில் உள்ள மத்திய குடிசைத்தொழில்கள் விற்பனை அரங்கத்தை பார்வையிட்டனர். அங்குள்ள பொருட்கள் அவர்களை கவர்ந்தன. அதில் பாரம்பரிய இந்திய பொருட்கள் பலவற்றை ஆர்வத்துடன் வாங்கினர்.

    இதன்பிறகு ஜே.டி.வான்ஸ் மற்றும் குடும்பத்தினர் லோக் கல்யாண் ரோட்டில் உள்ள பிரதமர் மோடி இல்லத்துக்கு சென்றனர். அங்கு இரவு 7 மணி அளவில் பிரதமரை சந்தித்த ஜே.டி.வான்ஸ் வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றி பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.

    இரு தலைவர்களும் ஏற்கனவே முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்வது தொடர்பாக பேசியுள்ளனர். மேலும் இரு நாட்டு உறவுகளையும் வலுப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரிகிறது.

    இதனைத்தொடர்ந்து ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, இரவு விருந்து அளித்தார்.

    இந்த நிலையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தேன். இந்தியாவுடனான நமது நாட்டின் உறவை வலுப்படுத்த நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். மேலும் இந்திய நாட்டின் அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×