

அந்தமான் நிக்கோபாரின் ஸ்வராஜ் தீவில் (ஹேவ்லாக் தீவு) புகழ்பெற்ற ராதாநகர் கடற்கரையில் கின்னஸ் சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது.
அங்கு கடலுக்கடியில் உலகின் மிகப்பெரிய இந்திய தேசியக் கொடியை விரித்ததன் மூலம் அந்தமான் நிக்கோபார் நிர்வாகம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
சுமார் 60 மீட்டர் நீளமும், 40 மீட்டர் அகலமும் கொண்ட பிரம்மாண்ட மூவர்ணக் கொடி கடலுக்கடியில் குறிப்பிட்ட ஆழத்தில் விரித்து வைக்கப்பட்டது.
அந்தமான் நிக்கோபார் காவல்துறை, வனத்துறை, இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் பல்வேறு டைவிங் மையங்களைச் சேர்ந்த சுமார் 200 ஸ்கூபா டைவர்ஸ் இதில் பங்காற்றினர்.
அந்தமான் நிக்கோபார் துணைநிலை ஆளுநர் டி.கே. ஜோஷி, தலைமைச் செயலாளர் சந்திர பூஷன் குமார் மற்றும் டிஜிபி எச்.எஸ். தலிவால் ஆகியோர் முன்னிலையில், கின்னஸ் உலக சாதனை நடுவர் ரிஷிநாத் இந்தச் சாதனையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து சான்றிதழை வழங்கினார்.