

33 வயதான த்விஷா சர்மா, கடந்த மே 12 அன்று போபாலில் உள்ள தனது கணவர் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
கணவர் சமர்த் சிங் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதியான சமர்த்தின் தாயார் கிரிபாலா சிங் ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக த்விஷாவின் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.
சமர்த் சிங்கின் குடும்பத்தினர் த்விஷாவுக்கு போதைப்பொருள் பழக்கம் மற்றும் மனநலப் பிரச்சினைகள் இருந்ததாகக் கூறி இக்குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.
மர்மமான முறையில் உயிரிழந்த த்விஷா ஷர்மாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக போபால் எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் மற்றும் நச்சுயியல் துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இதில் த்விஷா ஷர்மாவின் கழுத்தில் சிவப்பு நிற தழும்புகள், முகத்தில் இரத்தக் கட்டிகள், வலது கண்ணில் இரத்தக் கசிவுகள் உள்ளிட்ட காயங்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் கருப்பை பெரிதாக இருந்ததாகவும், அதில் சிதைவடையக் கூடிய திசுக்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டனர்.
அவரது மரணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மருத்துவ ரீதியான கருக்கலைப்பு செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தலைமறைவாக இருந்த சமர்த் சிங், ஜபல்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சமர்த் சிங்கிற்கு மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பின்பு, போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜரான அவரை ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க மத்திய பிரதேச போபால் நீதிமன்றம் உத்தரவிட்டது.