பஞ்சாபில் அடுத்தடுத்து 2 இடங்களில் குண்டுவெடிப்பு - பொதுமக்கள் பீதி

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பஞ்சாபில் அடுத்தடுத்து 2 இடங்களில் குண்டுவெடிப்பு - பொதுமக்கள் பீதி
Published on

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை தலைமையகத்தின் நுழைவுவாயில் அருகே நேற்று இரவு பலத்த சத்தத்துடன் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆன்லைன் பொருட்கள் விநியோக நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்குப் பார்சல்களை வழங்க வந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது.

இந்த சம்பவத்தின்போது அங்கு பணியில் இருக்கும் ஒருவருக்குச் சொந்தமான ஸ்கூட்டர் தீப்பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

ஒரு பார்சலைக் கொடுத்துவிட்டு அவர் தனது ஸ்கூட்டருக்குத் திரும்பியபோது, ​​ஓர் வெடிப்பு நிகழ்ந்து, அவரது வாகனம் சிதறியதுடன், அருகில் இருந்த சில மின் கம்பங்களையும் சேதப்படுத்தியது. இதில் ஒரு சிறுவனுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. இருப்பினும் இதன் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் ஓய்வதற்குள், இரவு 10:30 மணியளவில் அமிர்தசரசின் காசா பகுதியில் உள்ள ராணுவ முகாம் அருகே மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

இதனால் முகாமின் வெளிச்சுவரில் இருந்த ஒரு தகரக் கொட்டகை சேதமடைந்தது. இது அப்பகுதி முழுவதும் பீதியை ஏற்படுத்தியது. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.

இந்த வெடிப்பின் சத்தம் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவு வரை கேட்டதாகவும், ராணுவ வளாகத்தின் சுவர்கள் அதிரும் அளவிற்கு அதன் தீவிரம் இருந்ததாகவும் உள்ளூர் மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.

2 இடங்களிலும் பாதுகாப்பு படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்துள்ளதுடன், விசாரணையும் நடைபெற்று வருகிறது.

வெடிகுண்டு அகற்றும் குழு மற்றும் தடயவியல் குழுவினர், ஆய்வுக்காக சம்பவ இடங்களில் இருந்து மாதிரிகளைச் சேகரித்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com