

உத்தர பிரதேச மாநிலத்தின் கஸ்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு வயல்வெளியில் பயிற்சி விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறங்கியது.
விமானத்தை இயக்கிய 28 வயதுடைய பெண் பயிற்சி விமானி பாதுகாப்பாக உள்ளார் என்று விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான DGCA தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிக்கை:
விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. "அலிகரில் தனித்துப் பறக்கும் பயிற்சியில் (solo flying) ஈடுபட்டிருந்த 'சேட்டக் ஏவியேஷன்' நிறுவனத்தின் 'செஸ்னா 152' ரக விமானம் கஸ்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு வயல்வெளியில் அவசரமாக தரையிறங்கியது.
அந்தப் பெண் பயிற்சி விமானி பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவசர தரையிறக்கம்:
விமானம் விரைவு சாலையின் ஓரத்தில் தரையிறங்கியதாகவும், விமானி பாதுகாப்பாகவும் காயங்கள் ஏதுமின்றியும் இருப்பதாகவும் 'சேட்டக் ஏவியேஷன்' நிறுவனம் தகவல் அளித்துள்ளதாக DGCA தெரிவித்துள்ளது.
'செஸ்னா 152' என்பது முக்கியமாகப் பயிற்சி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒற்றை-என்ஜின் மற்றும் இரு இருக்கைகள் கொண்ட விமானம் ஆகும். இது குறித்த கூடுதல் விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை.
2-ஆவது சம்பவம்:
நேற்று (திங்கள்கிழமை) நடந்த இந்த சம்பவம், கடந்த நான்கு நாட்களில் உத்தர பிரதேச மாநிலத்தில் பயிற்சி விமானம் சம்பந்தமாக நிகழ்ந்த இரண்டாவது சம்பவம் ஆகும்.
ஜூன் 26 அன்று, கான்பூர் விமான நிலையத்தில் பயிற்சி விமானம் ஒன்றின் சுழலும் புரொப்பெல்லர் (propeller) தாக்கியதில் பயிற்சி விமானி ஒருவர் காயமடைந்தார்.