

மகாராஷ்டிராவில் பாஜக அமைச்சர் கிரிஷ் மகாஜன் நடத்திய ஆர்ப்பாட்டத்தினால் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மும்பை பெண் ஒருவர், அமைச்சரையும், போலீசாரையும் கடுமையாக சாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளைக் கண்டித்து மும்பை ஓர்லி பகுதியில் பாஜக சார்பில் "மகளிர் ஜன் ஆக்ரோஷ்" பேரணி நடத்தப்பட்டது. வழக்கமாகவே பரபரப்பாக காணப்படும் இப்பகுதியில், இந்த அரசியல் போராட்டத்தால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் மணிக்கணக்காக ஸ்தம்பித்தன.
அப்போது பள்ளியிலிருந்து தன் குழந்தையை அழைத்து வரச் சென்ற பெண் ஒருவர் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர், பாஜக அமைச்சரிடம் சென்று,
உங்களுக்குப் புரியவில்லையா? உங்களுக்கு என்னதான் பிரச்சனை? முதலில் இங்கிருந்து வெளியேறுங்கள். நூற்றுக்கணக்கான மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள், எங்காவது திறந்தவெளியில் போராட்டம் நடத்தக்கூடாதா என கோபத்தோடு கத்தினார். உடனே போலீஸ் அதிகாரி ஒருவர் தலையிட, அவரிடமும் கடுமையாக பேசிய அப்பெண் யாரும் தன்னிடம் பேசக்கூடாது என தெரிவித்தார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக மகாராஷ்டிரா காங்கிரஸ் அதனை பகிர்ந்து பாஜகவின் விளம்பர அரசியல் என சாடியுள்ளது. மேலும் துணிச்சலாக பேசியதாக இப்பெண்ணிற்கு வாழ்த்து தெரிவித்த பலரும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அரசியல் பேரணிகள் தடை செய்யப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.