

'தொகுதி மறுவரையறை மசோதா 2026’ உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,
“மக்களவையில் மாநிலங்களின் தற்போதைய விகிதாசாரப் பங்கைக் கணக்கில் கொள்ளாமல், தொகுதி மறுவரையறை நடவடிக்கையைத் தொடர மத்திய அரசு முனைப்புடன் இருப்பது, தொகுதி மறுவரையறை மசோதா 2026-ன் வரைவு அறிக்கையை பார்க்கும்போது தெரிகிறது.
இத்தகைய நடவடிக்கை மிகுந்த அநீதியானது. ஏனெனில், 1976-ஆம் ஆண்டின் தேசிய மக்கள் தொகைக் கொள்கையை மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படுத்திய கேரளா உள்ளிட்ட மாநிலங்களை இது தண்டிப்பதாக அமையும்.
மறுபுறம், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் பின்தங்கிய மாநிலங்கள், தங்கள் மெத்தனமான செயல்பாட்டிற்காக (கூடுதல் தொகுதிகள் மூலம்) வெகுமதி பெறுவது போல இது அமையும்.
கூட்டாட்சி தத்துவம் நமது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு. மக்களாட்சியில், பிரதிநிதித்துவத்திற்கான அடிப்படை நோக்கம் வெறும் எண்ணிக்கையாக (மக்கள் தொகை) மட்டும் இருக்க முடியாது. முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் உணர்வுகளையும், குறிப்பாக மாநிலங்களின் உணர்வுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு அணுகுமுறையைக் கையாள வேண்டும்.
இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்துடனான அணுகுமுறை என்பது மிகவும் அவசியமானது. அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட உள்ள ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம், மக்களவை இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் தற்போதைய முயற்சியானது, நமது அரசியலமைப்பு உருவாக்கத்தின் அடிப்படையாக இருந்த 'ஒருமித்த கருத்து' என்னும் உணர்வை சந்தேகத்திற்கு இடமின்றி சிதைத்துவிடும்.
மகளிர் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துகிறோம் என்ற போர்வையில், தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்தை அவசரகதியாக முன்னெடுப்பது என்பது, இந்த ஒட்டுமொத்த நடவடிக்கைக்குப் பின்னால் இருக்கும் உண்மையான நோக்கங்களை மறைப்பதற்கான ஒரு தந்திரமே அன்றி வேறல்ல.
நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கான தேர்தல் செயல்முறைகள் இன்னும் நிறைவடையாத நிலையில் இந்த விவகாரம் கையில் எடுக்கப்பட்டிருப்பது, இதன் பின்னணியில் உள்ள அரசியல் கணக்குகள் குறித்து நியாயமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
போதுமான விவாதங்கள் இன்றி கொண்டுவரப்படவுள்ள தற்போதைய 'தொகுதி மறுவரையறை மசோதா' உடனடியாகக் கைவிடப்பட வேண்டும். அதே நேரத்தில், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை, தொகுதி மறுவரையறை அல்லது மக்கள் தொகை கணக்கெடுப்புடன் எவ்வித தொடர்பும் படுத்தாமல், உடனடியாகச் செயல்படுத்த முடியும் மற்றும் செயல்படுத்தவும் வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.