நாளை நடக்கவிருந்த TET தேர்வு ஒத்திவைப்பு : வினாத்தாள் கசிந்ததால் அதிர்ச்சி!

மஹாராஷ்ட்ராவில் 1,028 மையங்களில் லட்சக்கணக்கான நபர்கள் எழுதவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
MaharashtraTET QuastionPaperLeak
Published on

நாடு முழுவதும் கல்வி வாரியத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மை குறித்த விவாதங்கள் எழுந்துள்ள சூழலில், மகாராஷ்டிராவில் மற்றொரு தேர்வு சர்ச்சை வெடித்துள்ளது.

மாநிலம் முழுவதும் நாளை நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து, தேர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் அதிரடி சோதனையில் சிக்கிய ஆதாரம்..

இன்று அதிகாலை வேளையில் பிவாண்டி பகுதியில் உள்ள சில நபர்களிடம் தேர்வு தொடர்பான ரகசியத் தகவல்கள் இருப்பதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த சில ஆவணங்களைச் சரிபார்த்தபோது, அதில் இருந்த வினாக்களும், நாளை தேர்வு மையங்களுக்கு அனுப்பப்படவிருந்த அசல் வினாத்தாளின் கேள்விகளும் அப்படியே ஒத்துப்போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது பிவாண்டி போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மறுதேதி பின்னர் அறிவிப்பு..

சூழலின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, 1,028 மையங்களில் லட்சக்கணக்கான நபர்கள் எழுதவிருந்த இந்தத் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்படுவதாகத் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மாற்றுத் தேர்வுக்கான தேதிகள் மற்றும் புதிய விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பேப்பர் லீக் அரசு" - வெடித்த அரசியல் சர்ச்சை..

வினாத்தாள் லீக் ஆனதையடுத்து ஏற்கனவே நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜூன் 21-ம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் மாநில அளவிலான தேர்விலும் இத்தகைய குளறுபடி நடந்துள்ளது அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள காங்கிரஸ் கட்சி, ஆளும் பா.ஜ.க கூட்டணி அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த ஆட்சியில் முறைகேடு இல்லாமல் எந்தவொரு அரசுத் தேர்வும் நடப்பதில்லை.

மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் இந்த அரசு, ஒட்டுமொத்தமாக 'பேப்பர் லீக் அரசாக' மாறிவிட்டது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com