12 ஆண்டுகள் நிறைவு.. மாநில தினத்தை கொண்டாடும் மக்கள் - தெலுங்கானா உருவான வரலாறு தெரியுமா?

1969 ஆண்டு தெலங்கானா பகுதியில் மிகப்பெரிய கிளர்ச்சி நடைபெற்றது.
12 ஆண்டுகள் நிறைவு.. மாநில தினத்தை கொண்டாடும் மக்கள் - தெலுங்கானா உருவான வரலாறு தெரியுமா?
Published on

ஜூன் 2, 2014 ஆம் ஆண்டு தெலங்கானா அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் 29வது மாநிலமாக ஆனது. இதன் வரலாறு நீண்ட நெடியது.

1956 ஆம் ஆண்டில், மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், தெலுங்கு பேசும் தெலங்கானா பகுதி ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டு ஆந்திரப் பிரதேசம் உருவாக்கப்பட்டது.

ஆந்திரா, தெலுங்கானா இரண்டுமே தெலுங்கு பேசும் பகுதிகள் என்றாலும் மொழிவழக்கிலும், கலாச்சார மற்றும் பாரம்பரிய அடையாளங்களிலும் இரண்டு பகுதி மக்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் இயற்கை வளங்கள் ஆகியவற்றில் சம பகிர்வு வாக்குறுதியளிக்கப்பட்டே ஆந்திராவுடன் தெலுங்கனா பகுதி இணைந்தது.

ஆனால் ஆந்திராவுடன் இணைந்த பின்னர் தங்களுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என தெலுங்கானா பகுதியில் வசிக்கும் மக்கள் கருதினர்.

இதனால் 1960கள் முதலே தெலுங்கானா தனி மாநில கோரிக்கை எழுந்தது. இதற்காக பல போராட்டங்கள் நடந்தன. பலர் உயிர் தியாகம் செய்தனர்

குறிப்பாக 1969 ஆண்டு தெலங்கானா பகுதியில் மிகப்பெரிய கிளர்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள், தொழிலாளர்கள், அரசியல் ஆர்வலர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

ஒரு இயக்கமாக தொடர்ந்து வந்த இந்த கோரிக்கையை 2001ல், கே. சந்திரசேகர் ராவ் (கே.சி.ஆர்) தலைமையில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்) முன்னெடுத்து சென்றது. இந்த இயக்கம் 2009 மற்றும் 2013-க்கு இடையில் உச்சத்தை அடைந்தது.

தொடர் அழுத்தத்தால் தெலுங்கானாவை தனி மாநிலமாக மாற்ற நாடாளுமன்றத்தால் மசோதா நிறைவேற்றப்பட்டு ஜூன் 2, 2014 அன்று தெலுங்கானா உருவானது.

இந்நாளை தெலுங்கானா மக்கள் மாநில தினமாக கொண்டாடி வருகின்றனர்.

இதில் மக்கள் தங்களுக்குள் வாழ்த்துக்களை பகிர்வதுடன், சமூக நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து நடத்துகின்றனர்.

இந்தாண்டு தெலுங்கானா தினத்துக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com