

ஜிஎஸ்டி திருத்தங்கள் அமல்படுத்தப்பட்ட பிறகும், உணவுப் பொருட்களின் விலையில் எதிர்பார்த்த அளவு குறைவு ஏற்படவில்லை என பேங்க் ஆஃப் பரோடா தனது சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்தாலும், உணவுப் பொருட்கள் மற்றும் தனிநபர் பராமரிப்புப் பொருட்களின் விலையில் விலையேற்றம் நீடித்தே வருவதாக தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைக்கப்பட்டாலும், மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் விநியோகச் சங்கிலித் தடைகள் அதன் சலுகையை ஈடுக்கட்டிவிடுவதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இதனால் வரிச் சலுகையின் முழுப் பயனும் நுகர்வோரைச் சென்றடையவில்லை.
உதாரணமாக ‘ஐஸ்கிரீம் விலைகள் 1.2 சதவீதமும், பழச்சாறு 0.4 சதவீதமும் மற்றும் தேயிலைத் தூள் விலை 0.9 சதவீதமும் குறைந்தன. இருப்பினும், பாலின் விலை 1 சதவீதமும், வெண்ணெய் 0.6 சதவீதமும் மற்றும் தயார் நிலை உணவுகளின் (ready-to-eat foods) விலை 0.9 சதவீதமும் அதிகரித்தன.
ஜிஎஸ்டி மாற்றங்களை அறிவித்ததில் இருந்து கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் 2026 மார்ச் மாதம் வரை உணவுப் பொருட்களின் விலையை ஒப்பிட்டு ஆராய்ந்ததில் இதனை கண்டறிந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக வரும் நாட்களில் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பாங்க் ஆஃப் பரோடா எச்சரித்துள்ளது.