

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஷேக் பேட்டில் தனியார் கால்நடை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்களுக்கு பிரத்யேக சிகிச்சை அளித்து வருகின்றனர். நவீன உபகரணங்கள் கொண்ட இந்த ஆஸ்பத்திரிக்கு நகரப் பகுதியில் வசிப்பவர்கள் தங்களுடைய செல்ல நாய்களை அடிக்கடி அழைத்து வந்து சிகிச்சை செய்கின்றனர்.
இந்த ஆஸ்பத்திரியில் நாய்கள் ரத்தத்தை எடுத்து மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெருக்களில் சுற்றித் திரியும் ஆரோக்கியமான நாய்களை ஆட்கள் மூலம் ஆஸ்பத்திரி வளாகத்திற்கு பிடித்து வருகின்றனர். அந்த நாய்களிடமிருந்து தேவையான அளவுக்கு ரத்தத்தை எடுத்து அதனை ரத்த வங்கியில் சேமிக்கின்றனர்.
செல்ல நாய்களுடன் வரும் பெரும் பணக்காரர்களே இலக்காக நிர்ணயித்துள்ளனர். நாய்களை சிகிச்சைக்கு கொண்டு வரும் வளர்ப்பு நாய்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்கின்றனர்.
பின்னர் இந்த நாய்க்கு ரத்தம் குறைவாக உள்ளது. எனவே போதுமான அளவு ரத்தம் ஏற்ற வேண்டும் என கூறி உரிமையாளரை சம்மதிக்க வைக்கின்றனர்.
இதை தொடர்ந்து ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்ட தெரு நாய்களின் ரத்தத்தை வீட்டு வளர்ப்புகளுக்கு செலுத்துகின்றனர். இதன் மூலம் ஒரு பொட்டலம் தெரு நாய் ரத்தம் ரூ.18,000 முதல் 25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மேலும் சில நேரங்களில் அதிக எடை கொண்ட வீட்டு வளர்ப்பு நாய்களிடமிருந்து உங்கள் நாய் தேவையை விட அதிக எடை உள்ளது என கூறி அவற்றிலிருந்தும் ரத்தத்தை எடுத்துள்ளனர். இதுபோன்ற ரத்தம் எடுக்கப்பட்ட தெருநாய்கள் பல ரத்த சோகையால் இறந்ததாக தகவல் பரவியது.
இது பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இதனை தொடர்ந்து விலங்குரிமை ஆர்வலர் மேனகா காந்தி என்பவர் அளித்த புகாரியின் பேரில் விலங்குகள் நல வாரியம் இது குறித்த விசாரணையில் இறங்கியுள்ளது.
இது ஐதராபாத் நகர பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விலங்கின ஆர்வலர்கள் கூறுகையில்,
செல்லமாக நாய்கள் வளர்க்கும் சிலர் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை தங்களுடைய செல்ல நாய்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென நினைக்கின்றனர்.
அவர்களை குறி வைத்து ஆஸ்பத்திரியில் ரத்த பரிமாற்ற மோசடி நடந்துள்ளது. இது குறித்து முழுமையான விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.