சீட்டாட்டத்தில் இழந்த பணத்தை மீட்க கடன் தராததால் நண்பனை அடித்துக் கொன்ற தொழிலாளி

ராமகிருஷ்ணா தாக்கியதில் படுகாயம் அடைந்த 3 பேரும் ரத்த வெள்ளத்தில் வீட்டிலேயே விழுந்து கிடந்தனர்.சிவன் மனைவியும் அவரது மகனும் ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக குண்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சீட்டாட்டத்தில் இழந்த பணத்தை மீட்க கடன் தராததால் நண்பனை அடித்துக் கொன்ற தொழிலாளி
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம், ஜங்கா ரெட்டி கூடேம் மண்டலம், மைசன்னா கூட பகுதியை சேர்ந்தவர் சிவன் (வயது 35). இவருக்கு சின்னி என்ற மனைவியும், மங்கராஜ் என்ற மகனும் உள்ளனர். வேகவரம் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணா (35) என்பவரும் சிவனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் பனை ஓலை வெட்டும் தொழில் செய்து வந்தனர்.

இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் உள்ளதால் வேலை முடிந்ததும் மது குடித்து விட்டு பணம் கட்டி சீட்டு விளையாடி வந்தனர்.

அப்போது ராமகிருஷ்ணா ரூ. 14 ஆயிரத்தை சீட்டு விளையாட்டில் இழந்தார். சீட்டு விளையாட்டில் இழந்த பணத்தைக் கட்ட ராமகிருஷ்ணாவிடம் பணம் இல்லாததால் எதிர் தரப்பில் விளையாடியவர்கள் அவரது பைக்கை பிடுங்கிக் கொண்டனர்.

ராமகிருஷ்ணா சிவனிடம் கடன் கேட்டார். பணத்தை கொடுத்தால் தனது பைக்கை மீட்டுக் கொள்வதாகவும் பின்னர் பணத்தை திருப்பித் தருவதாகவும் தெரிவித்தார்.

ஆனால் சிவன் தன்னிடம் பணம் இல்லை என நண்பரிடம் கூறினார். ராமகிருஷ்ணாவோ நேற்று உன்னுடைய உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் வாங்கி வந்தது எனக்கு தெரியும். அந்த பணத்தை கொடு என கேட்டார். அந்த பணம் தனது மனைவியிடம் உள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து ராமகிருஷ்ணா, சிவனுடன் அவரது வீட்டிற்கு சென்றார். வீட்டில் இருந்த மனைவியிடம் பணத்தை தருமாறு சிவன் கேட்டார். அதற்கு மனைவி மறுப்பு தெரிவித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராமகிருஷ்ணா அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து சிவனை சரமாரியாக தாக்கினார். இதனைக் கண்ட அவரது மனைவி மற்றும் மகன் ராமகிருஷ்ணா தடுத்தனர். அவர்களையும் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

ராமகிருஷ்ணா தாக்கியதில் படுகாயம் அடைந்த 3 பேரும் ரத்த வெள்ளத்தில் வீட்டிலேயே விழுந்து கிடந்தனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சிவன் மனைவியும் அவரது மகனும் ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக குண்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராமகிருஷ்ணாவை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com