search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மீசை முறுக்கி பேசினாலும் பயப்படமாட்டோம்: நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ரோஜா பதிலடி
    X

    மீசை முறுக்கி பேசினாலும் பயப்படமாட்டோம்: நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ரோஜா பதிலடி

    • தெலுங்கு தேசம் கட்சியினர் ரவுடித்தனம் செய்தால் அதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்.
    • 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாலகிருஷ்ணா ஓட்டு போட்ட மக்களுக்காக சட்டசபையில் இதுவரை எதையும் பேசவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. சட்டசபையில் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.வும் பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா தொடையை தட்டி மீசையை முறுக்கி சந்திரபாபு நாயுடுவை சட்ட விரோதமாக கைது செய்து உள்ளதாக பேசினார்.

    இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது சட்டசபைக்கு வந்த அமைச்சர் ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் நீங்கள் 23 பேர் மட்டுமே. நாங்கள் 151 பேர். எங்களை சட்டப் பேரவையில் மதிக்கவில்லை என்றால், உங்கள் நிலைமை என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.

    நாங்கள் அமைதியாக இருக்கிறோம். ஏனென்றால் நாங்கள் சட்டசபை, சபாநாயகர் மற்றும் சட்டங்களை மதிக்கிறோம்.

    தெலுங்கு தேசம் கட்சியினர் ரவுடித்தனம் செய்தால் அதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்.

    சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததற்கான உறுதியான ஆதாரங்களை சி.ஐ.டி. கண்டுபிடித்த பின்னரே அவர் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    நடிகர் பாலகிருஷ்ணா மீசையை முறுக்கினால் நாங்கள் யாரும் பயப்பட மாட்டோம். 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாலகிருஷ்ணா ஓட்டு போட்ட மக்களுக்காக சட்டசபையில் இதுவரை எதையும் பேசவில்லை. பெண்களை இழிவாக பேசுவது அவரது வழக்கம்.

    மைத்துனர் சந்திரபாபு நாயுடுவை காப்பாற்ற சட்டமன்றத்தில் சத்தமாக கூச்சலிட்டபடி அழுகிறார். சந்திரபாபு நாயுடுவை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக சித்தரிக்க பார்க்கின்றனர்.

    சந்திரபாபு நாயுடு மீது சட்ட விரோத வழக்கு இருந்தால் விவாதம் நடத்த வேண்டும்.

    சட்டசபையில் முறைபடி விவாதம் நடத்தப்பட வேண்டும். அதை விடுத்து சைக்கோக்கள் போல் கத்தி சபாநாயகர் மீது பாட்டில் வீசுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×