ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வடமாநில வாலிபர் கைது

திருச்சூரில் ரெயிலை தவறவிட்டதால் ரெயிலை நிறுத்த அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. ரெயில்வே பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்தனர்.
ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வடமாநில வாலிபர் கைது
Published on

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி செல்லும் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.

இந்த நிலையில் திருச்சூர் ரெயில் நிலைய அதிகாரிக்கு ஒரு மர்ம டெலிபோன் வந்தது. அதில் பேசிய நபர் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாகவும், சிறிது நேரத்தில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரெயில்வே அதிகாரி, உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். மேலும் அந்த ரெயில் சொரனூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து அங்கு மோப்ப நாய்களுடன் சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் ரெயில் பெட்டிகளில் சோதனை நடத்தினர். ஒவ்வொரு பெட்டியாக சோதனை நடத்தப்பட்டது. மேலும் பயணிகளின் உடமைகளையும் பரிசோதித்தனர். நள்ளிரவு வரை இச்சோதனை நீடித்தது.

இதில் ரெயிலில் வெடி குண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் வெடிகுண்டு இருப்பதாக கூறியது வெறும் புரளி எனவும் தெரியவந்தது.

இதற்கிைடயே ரெயிலில் சோதனை நடந்து கொண்டிருந்த போது அங்கு வடமாநில வாலிபர் ஒருவர் ஆட்டோவில் வந்து இறங்கினார். அவர் அவசரம், அவசரமாக ரெயிலில் ஏறினார். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் பார்த்தனர்.

அவர்கள் அந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு படையினர் அவரின் செல்போனை வாங்கி பார்த்தனர்.

இதில் அந்த வாலிபர்தான் திருச்சூர் ரெயில் நிலைய அதிகாரியுடன் பேசியது தெரியவந்தது. திருச்சூரில் ரெயிலை தவறவிட்டதால் ரெயிலை நிறுத்த அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்தனர். அவரது பெயர் ஜெயசிங். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com