ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று வெளிநாடு பயணம்

நாளை அந்நாட்டு அதிபர் போலா அகமது தினுபுவை சந்தித்து இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேசுகிறார்.கயானா அதிபர் முகமது இர்பான் அலியின் அழைப்பை ஏற்று மோடி வரும் 19-ந்தேதி அந்நாட்டுக்கு செல்கிறார்.
ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று வெளிநாடு பயணம்
Published on

பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் 21-ந்தேதி வரை நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய 3 நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று அந்நாட்டுக்கு அரசுமுறை பயணமாக செல்கிறார்.

17 ஆண்டுகளுக்குப் பிறகு நைஜீரியா செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும். இந்த பயணத்தின் போது அங்கு வசிக்கும் இந்தியர்களை அவர் சந்தித்து பேச உள்ளார். நாளை அந்நாட்டு அதிபர் போலா அகமது தினுபுவை சந்தித்து இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேசுகிறார்.

நைஜீரியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரேசில் செல்லும் மோடி ரியோ டி ஜெனிரோ நகரில் 18-ந்தேதி தொடங்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டுக்கு பிரேசில் அதிபர் லுயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தலைமை தாங்குகிறார்.

இந்த மாநாட்டில், நீடித்த வளர்ச்சி, பொருளாதார ஸ்திரத் தன்மை உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி எடுத்துரைக்கிறார். இந்த மாநாட்டுக்கு இடையே, பிரேசில் அதிபர் உட்பட பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இது அவரது 3-வது பிரேசில் பயணமாகும். இதற்கு முன்பு 2014 மற்றும் 2019-ல் பிரேசில் சென்று இருந்தார்.

அதை தொடர்ந்து, கயானா அதிபர் முகமது இர்பான் அலியின் அழைப்பை ஏற்று மோடி வரும் 19-ந் தேதி அந்நாட்டுக்கு செல்கிறார். 20-ந்தேதி அதிபர் இர்பான் அலியை சந்தித்துபேச உள்ளார்.

இதையடுத்து கயானா பாராளுமன்றத்தில் மோடி உரையாற்றுகிறார். அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார். கடந்த 1968-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் கயானாவுக்கு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 21-ந்தேதி அவரது கயானா பயணம் நிறைவடைகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com