ரெயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு: லாலு பிரசாத்- மகள் வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி சோதனை

லாலு பிரசாத் உறவினர்கள் வீடுகள், அவருடன் தொடர்புடைய அலுவலகங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
லாலு பிரசாத்
லாலு பிரசாத்
Published on

பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது 2004ம் ஆண்டு லாலுபிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக பதவி வகித்தார்.

அப்போது ரெயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. ரெயில்வே வேலை பெற முயற்சித்தவர்களிடம் இருந்து அவர் நிலத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இதையடுத்து லாலு பிரசாத் யாதவ் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் புதிய லஞ்ச வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

அதே போல் லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதி மீதும் போலீசார் புதிய வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்த கால கட்டத்தில் இந்த நில மோசடி நடந்துள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் புதிய வழக்கு தொடர்பாக லாலுபிரசாத் யாதவ் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். டெல்லி, பீகாரில் உள்ள 17 இடங்களில் இந்த சோதனை நடந்தது.

சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று இன்று காலை முதல் ஒரே நேரத்தில் இந்த அதிரடி சோதனையை நடத்தினார்கள்.

பீகாரில் உள்ள லாலு பிரசாத் யாதவ் வீடு, அவரது மகள் மிசாபாரதி வீடு ஆகிய இடங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். பீகார் தலைநகர் பாட்னாவில் மட்டும் 4 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

மேலும் லாலுபிரசாத் உறவினர்கள் வீடுகள், அவருடன் தொடர்புடைய அலுவலகங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இன்று காலை தொடங்கிய சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

லாலுபிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ஏற்கனவே ஓட்டல்களுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு செய்ததாக அவர் மீது கடந்த 2017ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்திருந்தது.

உரிமம் வழங்கியதற்காக கைமாறாக 3 ஏக்கர் நிலத்தை அவரும், அவரது குடும்பத்தினரும் வளைத்ததாகவும் சி.பி.ஐ. குற்றம்சாட்டி இருந்தது.

இந்த நிலையில் ரெயில்வே பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக புதிய வழக்கை பதிவு செய்து சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com