என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் பருவமழை மீண்டும் தீவிரம்- 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை
    X

    கேரளாவில் பருவமழை மீண்டும் தீவிரம்- 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை

    • காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    • நீர்நிலைகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மலைப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

    கோழிக்கோடு, நாதாபுரம், குட்டியாடி போன்ற மலைப்பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. தாமரச்சேரி பகுதியில் மண் சரிவும் ஏற்பட்டது. மணிக்கு 40 கி.மீ. வேகத்திற்கும் மேலாக காற்று வீசியதால் மரங்கள் சாய்ந்தன. கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நேரியமங்கலம் பகுதியில் அரசு பஸ் மீது மரம் விழுந்தது. இதனை தொடர்ந்து அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதில் சிக்கி நின்ற ஒரு காரின் மீது மற்றொரு மரம் முறிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கி சேதமடைந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் 1½ மணி நேரத்திற்கு பிறகே மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு காரில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.

    ஆனால் அதற்குள் காரில் பயணித்த இடுக்கி ராஜகுமாரி பகுதியைச் சேர்ந்த ஜோசப் (வயது 63) பரிதாபமாக இறந்தார். மேலும் காரில் இருந்த அவரது கர்ப்பிணி மகள் அஞ்சுமோள், அவரது கணவர், ஜோபி ஜான், ஜோசப்பின் மனைவி அன்னக்குட்டி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அடிமாலியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வயநாடு மாவட்டத்திற்கு நாளை (26-ந் தேதி) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு போன்ற மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு மஞ்சள் எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மாநிலத்தில் வட பகுதிகளில் கடந்த 22-ந்தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×