search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெங்களூரு விமான நிலையத்தில் பயணிகளிடம் பணம் வசூலித்த சென்னை வாலிபர் கைது
    X

    பெங்களூரு விமான நிலையத்தில் பயணிகளிடம் பணம் வசூலித்த சென்னை வாலிபர் கைது

    • பயணிகள் விமான நிலைய போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
    • போலீசார் விரைந்துவந்து வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    பெங்களூரு:

    பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் சிலர் தனது உடைமைகளை இழந்துவிட்டதாக கூறியும், பர்சை தவற விட்டதாகவும் கூறி பணம் வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இத்தகைய மோசடி நபர்கள் தற்போது விமான நிலையம்வரை வந்து விமான பயணிகளிடமும் கைவரிசை காட்ட தொடங்கிவிட்டனர்.

    பெங்களூரு தேவனஹள்ளியில் கெம்பேகவுட சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு சம்பவத்தன்று ஒரு வாலிபர் எனது தந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவருக்கு சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. பணம் கொடுத்து உதவுங்கள் என்று பலரிடம் பணம் வசூலித்தார்.

    அவரது நிலையை அறிந்த பலரும் அவரிடம் பணம் கொடுத்தனர். இந்த நிலையில் அவரது நடவடிக்கையில் சில பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் விமான நிலைய போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்துவந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பதும், தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என பொய் சொல்லி பணம் வசூலித்ததும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். மேலும் அவரை சோதனை செய்ததில் அவரது பர்சில் பல்வேறு வங்கிகளை சேர்ந்த 26 கிரெடிட் கார்டுகள் இருந்தன.

    சென்னைக்கு செல்வதற்கான முன்பதிவு டிக்கெட்டும் அவரிடம் இருந்தது. இதை தொடர்ந்து விக்னேசை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த விக்னேஷ் கடந்த ஆண்டு சென்னை, ஐதராபாத், மும்பை விமான நிலையங்களிலும் இதுபோன்று பணம் வசூலில் ஈடுபட்டுள்ளார். ஆனால் யாரும் அதுபற்றி புகார் செய்யவில்லை.

    மேலும் பெங்களூரு விமான நிலையத்தில் ஏற்கனவே ஒரு பயணியிடம் வேலைக்கான இண்டர்வியூ செல்ல வேண்டும், எனது உடைமைகளை இழந்துவிட்டேன் என கூறி ரூ.8 ஆயிரம் மோசடி செய்துள்ளார். இதுபற்றி அந்த பயணி கொடுத்த புகாரில்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×