

திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் வெற்றி பெற்றதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு நன்றி செலுத்துவதற்காக புனித ஜோசப் கல்லூரியில் தமிழக முதல்வர் விஜய் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்த ஒரு நிமிடத்திற்காக என் வாழ்க்கையில் பல வருடங்கள் காத்திருந்தேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களே, அப்டின்னு கூப்பிடுற அந்த ஒரு நொடிக்காக பல வருடங்கள் நாம் தவமிருந்தோம். அந்த தவம் இன்று நிறைவேறி இருக்கிறது.
‘முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்’ என்று ஒரு திருக்குறள் உள்ளது. நீதி நெறி தவறாமல் ஆட்சி நடத்தும் ஆட்சியாளரை மக்கள் தலைவராக இறைவனாக கொண்டாடுவார்கள். இந்த திருக்குறள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பொருந்தும்.
இதே திருச்சியை தங்களின் கோட்டை என்று சொன்னவர்களுக்கெல்லாம் அதை வெறும் மனக்கோட்டை தான் என்று அதையும் உடைத்து இந்த மலைக்கோட்டை மாநகரை தளபதியின் கோட்டையாக மாற்றி இருக்கிறோம்.
சாதாரன நபர்கள் எல்லாம் வேட்பாளராக அறிவித்திருக்கிறார். சாதாரன குடும்பத்தை வேட்பாளராக நிற்க வைத்திருக்கிறார். இவர்கள் எல்லாம் நம்மை எதிர்த்து ஜெயிச்சிட முடியுமா, அப்படி என்று பகல் கனவு கண்டிருந்தார்கள். சாதாரன குடும்பத்தில் இருந்து வந்த என்னை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக அறிவித்தார்.
அறிவிப்பு வந்த உடனேயே, ஸ்ரீ ரங்கத்தில் வெற்றி பெறுபவர்கள் தான், ஆட்சியை அமைக்க முடியும் அது செண்டிமெண்ட் என்று ஏளனமாக பார்த்தார்கள். ஆனால் இந்த சாமானியனை ஸ்ரீ ரங்கத்தில் வெற்றி பெற வைத்து ஆட்சியில் முதலமைச்சராக அமரைவைத்து இருக்கக்கூடிய ஒரு மாபெரும் தலைவர், நம்முடைய தலைவர் மட்டும் தான்.
சின்ன பசங்கன்னு ஏளனமா பாக்காதீங்க, இந்த சின்ன பசங்க என்ன செய்வாங்கன்னு காட்டுவோம். இந்த சின்ன பசங்க எதிர்காலத்தில எதிர்கட்சியே இல்லாத சட்டமன்றத்தில் எங்கள் அண்ணனை முதலமைச்சராக உட்கார வைப்போம்.
இது வருங்காலத்தின் வரலாறாக மாறும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.