

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், தனது நெருங்கிய உதவியாளர் சந்திரநாத் ரத் சுட்டுக் கொல்லப்பட்டதை "கொடூரமான கொலை" என்று பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி விவரித்தார். மேலும், தாக்குதலை நடத்துவதற்கு முன்பு கொலையாளிகள் அப்பகுதியை நோட்டமிட்டிருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 48 மணி நேரத்திற்குள் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், நேற்றிரவு (புதன்கிழமை) மத்யம்கிராமில் அதிகாரியின் நிர்வாக உதவியாளரான ரத், சுட்டுக் கொல்லப்பட்டார். இது கடுமையான அரசியல் எதிர்வினைகளைத் தூண்டி, அப்பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, இரவு சுமார் 10.30 மணியளவில் மத்தியம்கிராமில் உள்ள டோல்டலா அருகே, மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ரத்தின் வாகனத்தை வழிமறித்து, அதை நிறுத்த சொல்லி மிரட்டி, மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
தாக்குதலுக்கு பிறகு ரத் கொண்டு செல்லப்பட்ட மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரி, இந்தச் சம்பவம் "இதயத்தை நொறுக்குவதாக" இருந்தது என்றார்.
"இந்தச் சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது; இச்சம்பவத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். தாக்குதல் நடத்தப்பட்ட விதம், தாக்குதல் நடத்தியவர்கள் முன்னதாகவே நோட்டமிட்டிருந்ததை தெளிவாகக் காட்டுகிறது.
காவல்துறையினர் இவ்விவகாரத்தை விசாரித்து வருவதால், தற்போதைக்கு நாங்கள் எந்த முடிவுக்கும் வர விரும்பவில்லை. யாரும் சட்டத்தைத் தங்கள் கையில் எடுக்க வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் ," என தெரிவித்தார்.
இதை 'கொடூரமான கொலை' என்று குறிப்பிட்ட அதிகாரி, இந்த விவகாரம் முழுமையாக விசாரிக்கப்படும் என டிஜிபி சித்தநாத் குப்தா தன்னிடம் உறுதியளித்ததாக தெரிவித்தார்.
துப்பாக்கி சூட்டை நடத்துவதற்கு முன்பு தாக்குதல் நடத்தியவர்கள் முன் ஆய்வு மேற்கொண்டதாக தெரிவதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சி தொண்டர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்வதாக பாஜக தலைவர் மேலும் கூறினார்.