

மருத்துவ கல்லூரி மாணவர் நிதின் ராஜ் (22) உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவத்தைக் கண்டித்து, இன்று கேரளாவில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பல் அறுவை சிகிச்சை இளங்கலை படித்து வந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நிதின் ராஜ் என்ற மாணவர், கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி கல்லூரி கட்டிடத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
கல்லூரியின் பேராசிரியர்கள் அவரை சாதி ரீதியாகவும், தோற்றத்தை வைத்தும் தொடர்ந்து துன்புறுத்தியதே அவர் உயிரிழப்புக்குக் காரணம் என்று அவரது குடும்பத்தினர் மற்றும் சக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பான ஆடியோ ஆதாரங்களும் வெளியாகியுள்ளன.
மாணவர் உயிர் மாய்ப்புக்கு காரணமாகக் கருதப்படும் பேராசிரியர் எம்.கே. ராம் மற்றும் சங்கீதா ஆகியோர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பேராசிரியர் ராம் ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கேரளாவில் உள்ள பல்வேறு தலித் அமைப்புகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலம் தழுவிய முழு அடைப்பில் ஈடுபட்டுள்ளன. சுமார் 52 அமைப்புகள் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளித்துள்ளன.
அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும், எந்த வாகனங்களும் வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட மாட்டாது என்றும் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.