

தென்மேற்கு பருவமழை காரணமாக மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து பள்ளி வேன் மீது விழுந்ததில் மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பூர் பகுதியில் உள்ள நம்பர் 11 சாலையில் இன்று 13 மாணவர்களுடன் பள்ளி வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலை ஓரத்தில் உள்ள ராட்சத மரம் ஒன்று வெரோடு சாய்ந்து பள்ளி வேன் மீது விழுந்தது. இதில் பள்ளி வேன் நொறுங்கியது. இதில் 13 மாணவர்களும் சிக்கிக் கொண்டவர். பின்னர் மாணவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் ஒரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். சில மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் மக்கள், சாலையோர மரங்களில் உள்ள பெரிய கிளைகள், சாய்ந்து முறியடிக்கூடிய வகையில் இருந்த கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்தோம். இந்த பகுதியில் அதற்கு முன்னதாகவும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆனால், பலமுறை எச்சரித்தும் மாநகராட்சி எந்த நடவடிக்கையில் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினர்.