மிடில் கிளாஸ் மக்களின் கல்லூரி படிப்பு என்ற பார்வை தவறானது: முதலீட்டாளர் இவ்வாறு சொல்ல காரணம்?

இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டுபவர்கள் பெரும்பாலும் பட்டதாரிகள் அல்ல. மாறாக 12-ஆம் வகுப்போடு படிப்பை நிறுத்தியவர்களே என்று முதலீட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மிடில் கிளாஸ் மக்களின் கல்லூரி படிப்பு என்ற பார்வை தவறானது: முதலீட்டாளர் இவ்வாறு சொல்ல காரணம்?
Published on

மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மானேஜர்ஸ் (Marcellus Investment Managers) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை முதலீட்டு அதிகாரியான சௌரப் முகர்ஜியா, சமீபத்திய பாட்காஸ்ட் (podcast) ஒன்றில் இந்த கருத்தை முன்வைத்தார். வேலைவாய்ப்பு சந்தையில் நுழையும் இளைஞர்களுக்கு இந்தியாவின் கல்வி முறை எந்தளவுக்கு பயனுள்ள மதிப்பை சேர்க்கிறது என்பதை அவர் இதில் கேள்விக்குள்ளாக்கினார்.

இந்தியாவின் கல்வி முறை இன்றும் மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் (rote learning) என்ற அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளதாக முகர்ஜியா கூறினார். செயற்கை நுண்ணறிவு (AI), மின்சார வாகனங்கள், உயிரி தொழில்நுட்பம், தூய தொழில்நுட்பம் (clean tech) மற்றும் மேம்பட்ட அறிவியல் சார்ந்த உலகிற்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் இந்த அணுகுமுறை இல்லை என்கிறார்.

செயற்கை நுண்ணறிவு (AI) பற்றி பேசுவதை விடுங்கள், தரவுகளிலேயே இதை நாம் காண முடிகிறது. பட்டதாரிகள் மத்தியில் நிலவும் வேலையின்மை புள்ளி விவரங்கள் இந்த பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது. கல்லூரியிலிருந்து வெளியேறும் ஒவ்வொரு 100 பட்டதாரிகளில், வெறும் மூன்று பேர் மட்டுமே தாங்கள் பட்டம் பெற்ற அதே ஆண்டில் வேலையைப் பெறுகின்றனர்.

படிப்பறிவற்றவர்களிடையே வேலையின்மை விகிதம் சுமார் 3% ஆக உள்ள நிலையில், பட்டதாரிகளிடையே அது 30-40% ஆக உள்ளது. பல்கலைக்கழகக் கல்வி முறையானது திறன்களை வளர்ப்பதற்கு பதிலாக வெறும் மனப்பாடம் செய்யும் (rattafication) செயல்முறையாகவே உள்ளது. இந்தியாவில் பல்கலைக்கழகத்திற்கு செல்லாமல் இருப்பதே சிறந்தது.

இந்தப் பிரச்சினை கல்லூரிக்கு செல்வதற்கு முன்பே தொடங்கிவிடுகிறது. பள்ளிப் பருவத்தில்கூட மாணவர்கள் சிந்தித்துச் செயல்படுவதில்லை. பள்ளி அமைப்புகளும் கூட மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றன. இதன் விளைவாக, நவீனத் தொழில்நுட்பத் துறைகளில் திறனை வளர்த்துக்கொள்வதில் இந்தியா சிரமப்படுகிறது. நாம் AI, மின்சார வாகனங்கள் (EV), உயிரித் தொழில்நுட்பம் அல்லது தூய தொழில்நுட்பம் என எதிலும் முன்னணியில் இல்லை.

கல்லூரி பட்டம் போதுமான மதிப்பை சேர்க்கவில்லை என்பதை இந்திய நிறுவனங்கள் மறைமுகமாக உணர்த்தி வருகின்றன. இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டுபவர்களில் சிலர் 12-ஆம் வகுப்போடு படிப்பை நிறுத்தியவர்கள்.

குளிர்சாதன வசதி கொண்ட அலுவலக வேலையை தேடும் ஒரு பட்டதாரி, கட்டுமானப் பணியில் ஈடுபடுபவரை விடக் குறைவான வருமானத்தையே பெறக்கூடும். ஒரு கட்டுமானத் தொழிலாளி அதைவிட இரு மடங்கு வருமானம் ஈட்டுவார். ஒரு ஜேசிபி (JCB) இயந்திரத்தை இயக்குபவர் அதைவிடவும் அதிக வருமானம் ஈட்ட முடியும்.

இது வெறும் கல்வி சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, ஒரு பொருளாதாரப் பிரச்சனையும் கூட. நவீன உலகில் இந்தியா போட்டியிட விரும்பினால், தற்போதைய கல்வி முறை மனப்பாடம் செய்யும் முறையிலிருந்து விலகி, இளைஞர்களுக்கு சிந்திக்கும் திறனை கற்றுக்கொடுக்கும் வகையில் மாற வேண்டும் என்றார் முகர்ஜியா.

X

Maalai Malar
www.maalaimalar.com