

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பிரசித்தி பெற்ற நேரு விலங்கியல் பூங்கா உள்ளது. 380 ஏக்கர் பரப்பளவில், பல்வேறு வகையான 1,500-க்கும் மேற்பட்ட விலங்குகளுக்கு வாழ்விடமாக இது அமைந்து உள்ளது. 1959-ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த மிருகக்காட்சி சாலையானது ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக இருப்பதுடன், வனவிலங்கு பாதுகாப்புக்கான மையமாகவும் செயல்படுகிறது.
இங்குள்ள விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வனவற்றை கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க பூங்கா அதிகாரிகள் பல்வேறு ஏற்பாடுகளைச் செயல்படுத்தி உள்ளனர். விலங்குகளின் இருப்பிடங்களுக்குள் வெப்பத்தைக் குறைப்பதற்காக, ஷவர்கள் போன்ற குளிர்விக்கும் சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. நேரடி சூரிய ஒளிபடுவதைத் தவிர்ப்பதற்காக, பறவைக் கூண்டுகள் புல் அடுக்குகளால் மூடப்பட்டுள்ளன.
மனிதக் குரங்குகள் போன்றவற்றை பாதுகாக்க குளிரூட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இரவு நேரம் காற்றை வெளியேற்றும் விசிறிகளுடன் கூடிய குளிர்பதனக் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. தாவர உண்ணி விலங்குகளுக்கு நிழல் தரும் கட்டமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன, அதே சமயம் வாத்துகள் மற்றும் நாரைகள் உள்ள குளங்களில் நிழல் வலைகள் விரிக்கப்பட்டுள்ளன.
விலங்குகளுக்கு கோடை கால உணவான முலாம்பழம், தர்பூசணி மற்றும் சிட்ரஸ் பழங்கள் விலங்குகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக ஐதராபாத் விலங்கியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர். நீர்ச்சத்து குறைபாட்டைத் தடுப்பதற்காக அவற்றுக்குக் குடிநீரும், கால்நடை மருத்துவரின் ஆலோசனையின்படி வைட்டமின் சி மற்றும் பி-காம்ப்ளக்ஸ் போன்ற கூடுதல் சத்துக்களும் வழங்கப்பட்டுள்ளன.
நேரடி சூரிய ஒளியைத் தடுப்பதற்காக, விலங்கு அடைப்பிடங்களில் சிறப்பு வைக்கோல் கூரைகளும் புல் அடுக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், குளிர்ச்சியான சூழலைப் பராமரிப்பதற்காக ஒரு நாளைக்கு பலமுறை தவறாமல் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
விலங்குகளின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவும், வெப்ப தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் ஒரு பிரத்யேக கால்நடை மற்றும் விலங்கு பராமரிப்புக் குழு செயல்பட்டு வருகிறது. விலங்குகளின் பராமரிப்பு மட்டுமின்றி, ஐதராபாத் விலங்கியல் பூங்காவில் பார்வையாளர்களுக்கான வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
கோடைக்காலத்தின் உச்ச நேரங்களில் பார்வையாளர்களுக்கு இதமளிக்கும் வகையில், பூங்கா முழுவதும் பனை ஓலைக் கொட்டகைகள், அமரும் இடங்கள், கோபுரங்கள் மற்றும் குடிநீர் வழங்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.