எங்கே செல்லும் இந்த பாதை...! - அரசு வேலைக்காக 'அப்பா'வை கொன்ற மகன்

விஜய் சவுகான் மற்றும் அமித் சிங், மல்லா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Son Arrested
Published on

ஜார்கண்ட் மாநிலம் தான்பாத் மாவட்டம் பரோராவைச் சேர்ந்தவர் துலேஷ்வர் நோனியா. இவர் அங்குள்ள பொதுத்துறை நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி வந்தார். அவர் இன்னும் 2 ஆண்டுகளில் ஓய்வு பெற இருந்தார்.

துலேஷ்வரின் மகன் விஜய் சவுகான். இவர் தனது தந்தையின் வேலையை பெற விரும்பினார். தந்தை இறந்தால் மட்டுமே கருணை அடிப்படையில் அவருக்கு அந்த வேலை கிடைக்கும் என்ற நிலை இருந்ததால், அவரை கொலை செய்துவிட்டு, அந்த வேலையை பெற வேண்டும் என்று திட்டமிட்டார்.

இதற்காக அதே பகுதியைச் சேர்ந்த அமித் சிங், அகிலேஷ் மல்லா ஆகியோரை கூலிப்படையாக ஏற்பாடு செய்தார். அதற்காக அவர்களுக்கு ரூ.10 லட்சம் அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், முன்தொகை எதுவும் அளிக்கவில்லை.

கல்லால் தாக்கி கொலை

கடந்த 19-ந் தேதி இரவு தங்களது திட்டத்தை செயல்படுத்துவது என்று அவர்கள் 3 பேரும் முடிவு செய்தனர். தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் உறவினர் இல்ல திருமணத்துக்கு செல்வதாக தந்தையிடம் கூறிவிட்டு, 19-ந் தேதி காலையிலேயே விஜய் சவுகான் வெளியூர் சென்று விட்டார்.

அன்று இரவு, நிலக்கரி சுரங்கத்துக்கு வெளியே கூலிப்படையினர் அமித் சிங்கும், மல்லாவும் மோட்டார் சைக்கிளில் காத்திருந்தனர். துலேஷ்வர், பணி முடித்து வெளியே வந்தவுடன், அவரை மோட்டார் சைக்கிளில் வலுக்கட்டாயமாக ஏற்றி, அழைத்துச்சென்றனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமான இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவர்கள், துலேஷ்வரை ஒரு பெரிய கல்லால் தாக்கி கொலை செய்தனர். பின்னர் அவரது முகத்தையும் சிதைத்தனர்.

அதைத்தொடர்ந்து, விபத்துபோல் தெரிய வேண்டும் என்பதற்காக, துலேஷ்வரின் உடலை சாலையின் நடுவே இழுத்துப் போட்டு விட்டுச் சென்றனர்.

3 பேர் கைது

சாலையில் முகம் சிதைந்த நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி விசாரித்த போலீசார், அது துலேஷ்வர் என்பதை உறுதி செய்தனர். மேலும் நிலக்கரி சுரங்கத்தின் முன்புள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பரிசோதித்தபோது, அமித் சிங்கும், மல்லாவும் துலேஷ்வரை மோட்டார் சைக்கிளில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றதை கண்டுபிடித்தனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, விஜய் சவுகானுக்காக கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். அரசு வேலைக்காக தந்தையையே மகன் கொலை செய்ததை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து விஜய் சவுகான் மற்றும் அமித் சிங், மல்லா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மல்லா, குற்றப்பின்னணி கொண்டவர் ஆவார். அவர் மீது நிலக்கரி திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அரசு வேலைக்காக அப்பாவையே கொன்ற இந்த சம்பவம், 'எங்கே செல்லும் இந்த பாதை...' என்று நினைக்க தோன்றும் வகையில் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com