

மாநிங்களவையில் பா.ஜ.க. எம்.பி. கே. லட்சுமணன் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் ஓ.பி.சி. ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்குவதாக குற்றம்சாட்டியதால், எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவை Zero Hour-ல் பா.ஜ.க. எம்.பி. கே. லட்சுமணன் பேசியதாவது:-
கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா மற்றும் தெலுங்கானா போன்ற சில மாநிலங்கள் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அவர்களை OBC பிரிவில் சேர்த்துள்ளன. அரசியலமைப்புச் சட்டம் மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்யவில்லை. அம்பேத்கர் இதனை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக, சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியுள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) இட ஒதுக்கீடு, தற்போது மதத்தின் பெயரால் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நமது அரசியலமைப்பின் நெறிமுறைகளுக்கு முரணாக, மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வாக்கு வங்கி அரசியலுக்காக, சில மாநிலங்கள் OBC-களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த இட ஒதுக்கீடுகளை, குறிப்பாக முஸ்லிம்கள் உள்ளிட்டோருக்கு மத அடிப்படையில் விரிவுபடுத்துகின்றன.
கர்நாடகத்தில், அம்மாநிலத்தின் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் தனித்ததொரு சாதியாகக் கருதப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் (OBC) பட்டியலின்றி, முஸ்லிம்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
மேற்கு வங்கத்திலோ, சுமார் 97 சதவீத முஸ்லிம் சமூகங்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இது, பெரும்பாலும் பின்தங்கிய நிலையில் உள்ள பிற சமூகங்களுக்குச் சேர வேண்டிய நியாயமான பங்கை அவர்களுக்குக் கிடைக்காமல் செய்கிறது.
தமிழ்நாட்டில், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் பிரிவுகள், அம்மாநிலத்தின் மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில் ஏறத்தாழ 95 சதவீதத்தினரை உள்ளடக்கியுள்ளன. இவர்களுக்குப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
கேரளாவிலோ பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம் என்பது ஒரு சாதியாக பட்டியலிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான இட ஒதுக்கீடு 3 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் OBC பட்டியலில் இடம்பெற்றுள்ள முஸ்லிம்களை தவிர, முஸ்லிம்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக 4 சதவீத இடஒதுக்கீட்டை காங்கிரஸ் அரசு வழங்கியது. அம்மாநில உயர் நீதிமன்றம் அந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டது
மதம் சார்ந்த இத்தகைய இட ஒதுக்கீடுகள் குறித்து ஒரு விரிவான மறுஆய்வை மேற்கொள்ளுமாறு, அரசை நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நமது கொள்கையானது, வெறும் மத அடையாளத்தின் மீது மட்டும் கவனம் செலுத்தாமல், சமூக மற்றும் கல்விசார் பின்தங்கிய நிலையின் மீதே கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்தால்தான், சமூக நீதியின் உண்மையான உணர்வை நம்மால் பாதுகாக்க முடியும்.
இவ்வாறு லட்சுமணன் எம்.பி. பேசினார்.
இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எம்.பி.கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அத்துடன் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.