

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிரான 34 லட்சத்திற்கும் மேற்பட்ட மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர்கள் எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தொடர்புடைய மனுக்களை விசாரித்தது.
அப்போது மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 34 லட்சம் மக்கள் உண்மையான வாக்காளர்கள் இல்லையா? அவர்கள் உண்மையான வாக்காளர்கள்தான், அவர்களை நடப்பு தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என கோரினார்.
இதற்கு பதிலளித்த, தலைமை நீதிபதி சூர்யகாந்த், “அதற்கு இடமில்லை. இதை நாம் அனுமதித்தால், இதில் சேர்க்கப்பட்டுள்ள மக்களின் வாக்குரிமையை நிறுத்துவதற்கு சமம்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் மனுக்கள் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களில் இன்னும் நிலுவையில் உள்ளதால், அத்தகைய இடைக்கால நிவாரணம் வழங்க இயலாது. இந்தக் கட்டத்தில் நீதித்துறைத் தலையீடு தேவையற்றது. தற்போதைய சட்ட நடைமுறையையே பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் மேலும் தெரிவித்தனர்.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அண்மையில் அங்கு நடந்து முடிந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 76 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.