இந்தியாவின் 5-ஆவது முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக சிக்கிம் அறிவிப்பு!

எழுத்தறிவுப் பெற்ற வடகிழக்கு மாநிலங்களில் 3-ஆவது மாநிலமாக சிக்கிம் உருவெடுத்துள்ளது.
இந்தியாவின் 5-ஆவது முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக சிக்கிம் அறிவிப்பு!
Published on

இந்தியாவின் மிசோரம், கோவா, திரிபுரா, இமாச்சலப்பிரதேசம் போன்ற யூனியன் பிரதேசங்களைத் தொடர்ந்து, 100% எழுத்தறிவுப் பெற்ற மாநிலமாக சிக்கிம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனையின் மூலம் இந்தியாவில் முழு எழுத்தறிவு பெற்ற 5-ஆவது மாநிலமாகவும், வடகிழக்கு மாநிலங்களில் 3-ஆவது மாநிலமாகவும் சிக்கிம் உருவெடுத்துள்ளது. சிக்கிம் 99.82 சதவீத எழுத்தறிவு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. இது முழுமையான எழுத்தறிவுக்காக, மத்திய கல்வி அமைச்சகம் நிர்ணயித்துள்ள 95 சதவீதம் என்ற தகுதி அளவை விட அதிகமாகும்.

கேங்டாக்கில் நடைபெற்ற சிக்கிம் பல்கலைக்கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழாவின் போது, முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கேங்டாக்கில் உள்ள மனன் கேந்திராவில் நடந்த இந்த விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்தூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

"ULLAS - நவ் பாரத் சாக்ஷார்த்தா காரியக்ரம் திட்டத்தின் கீழ், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ULLAS என்பது 'Understanding of Lifelong Learning for All in Society' (சமூகத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்நாள் முழுவதுமான கற்றலைப் புரிந்துகொள்ளுதல்) என்பதைக் குறிக்கிறது. மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் தொடங்கப்பட்ட ஒரு நிதியுதவி திட்டமாகும்.

இந்தத் திட்டம் சிக்கிமில் 14 நவம்பர் 2022 அன்று தொடங்கப்பட்டது. இது மாநிலத்தில் உள்ள 6 மாவட்டங்கள், 34 வட்டாரங்கள், கிராம பஞ்சாயத்து அமைப்புகள் மற்றும் வார்டுகளிலும் செயல்படுத்தப்பட்டது.

கிராம பஞ்சாயத்துகள், தன்னார்வ ஆசிரியர்கள், கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அமைப்புகளின் கூட்டு முயற்சியால், மாநிலத்தின் தொலைதூர கிராமங்கள் வரை இத்திட்டம் கொண்டு சேர்க்கப்பட்டு, முறைசாரா கல்வி மூலம் முதியவர்கள் மற்றும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com