உத்தரபிரதேசத்தில் குழந்தைகளுடன் தொடக்கப் பள்ளிக்கு செல்லும் முதியவர்கள்

பள்ளிக் குழந்தைகளைப் போல சீருடை அணிந்து, கைகளில் புத்தகப்பைகளுடன் இந்த முதிய 'மாணவர்கள்' பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தனர்.
உத்தரபிரதேசத்தில் குழந்தைகளுடன் தொடக்கப் பள்ளிக்கு செல்லும் முதியவர்கள்
Published on

கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், உத்தரபிரதேச மாநிலம் ஜாலவுன் மாவட்டத்தில், 60 முதல் 78 வயது வரையிலான 9 முதியவர்கள் பள்ளி சீருடை அணிந்து, கைகளில் புத்தகங்களுடன் தொடக்கப் பள்ளி வகுப்பறைகளில் குழந்தைகளுடன் அமர்ந்து படிக்கத் தொடங்கியுள்ளனர்.

முதியவர்கள் மத்தியில் எழுத்தறிவை மேம்படுத்துவதற்காகவும், கிராமப்புறங்களில் 'கையொப்பம்' போடுவதைக் கற்றுக் கொடுப்பதற்காகவும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரால் தொடங்கப்பட்ட இந்தத் தனித்துவமான முயற்சி, தற்போது நாடு முழுவதும் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. 

ஜாலவுன் மாவட்டத்தின் துணை கோட்ட நீதிபதியும் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ரிங்கு சிங் ரஹி, தனது எல்லைக்குட்பட்ட கிராமங்களில் முதியவர்கள் பலர் தங்களது அன்றாட தேவைகளுக்குக் கூட எழுதப் படிக்கத் தெரியாமல் அவதிப்படுவதைக் கண்டறிந்தார்.

இதையடுத்து சாதனி என்ற கிராமத்தைச் சேர்ந்த 7 முதியவர்கள் மற்றும் 2 மூதாட்டிகள் என மொத்தம் 9 பேரை அங்குள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களாகச் சேர்த்துள்ளார்.  

பள்ளிக் குழந்தைகளைப் போல சீருடை அணிந்து, கைகளில் புத்தகப்பைகளுடன் இந்த முதிய 'மாணவர்கள்' பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தனர். இவர்களைக் கண்டதும் அங்கிருந்த ஆசிரியர்களும், பள்ளிச் சிறுவர்களும் பலத்த கைதட்டல் மற்றும் மலர் மாலைகள் அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து, தங்களது பேரன், பேத்திகள் வயதுடைய குழந்தைகளுடன் அமர்ந்து அவர்கள் ஆர்வமாகப் பாடங்களைக் கவனித்தனர்.

இனி நாங்கள் கட்டை விரல் ரேகை வைக்காமல், சொந்தமாகப் பெயர் எழுதி கையெழுத்திடுவோம் என்று இந்த முதியவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். தங்கள் வயதைப் பொருட்படுத்தாமல், முதியவர்கள் கிராமப் பள்ளியில் சேர்ந்து ஒரு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

கல்வி கற்காமலேயே எழுத்தறிவின்மையால் அவதிப்படும் முதியவர்களுக்குக் கல்வி அளிப்பதே எங்களது நோக்கம் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி ரிங்கு சிங் ராஹி தெரிவித்தார். அவரது இந்த செயல் கல்வியின் அவசியம் குறித்து அப்பகுதி மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com