

மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ந்தேதி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது மிகப்பெரிய அளவில் வன்முறை, மோதல், வாக்கு இயந்திரம் சேதப்படுத்துதல் போன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை. இதனால் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படவில்லை.
142 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 29-ந்தேதி நடைபெற்றது. இதில் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. பல வாக்குச்சாவடிகளில் பாஜக சின்னம் டேப் ஒட்டி மறைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுபோன்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து, இரண்டு தொகுதிகளுக்கான உட்பட்ட 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. மகர்ஹாத் பாஸ்சிம் தொகுதியில் உள்ள 11 வாக்குச் சாவடிகளிலும், டைமண்ட் ஹார்பர் தொகுதியில் உள்ள 4 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் மே 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் கொல்கத்தாவில் நாளை முதல் 60 நாட்களுக்கு 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நாளன்று வன்முறை போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக உளவுத்துறையின் தகவலையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் மே 3 முதல் ஜூலை 1-ந்தேதி வரை 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.