ஆற்றில் விழுந்த காதல் சின்னம் - மீட்டு கொடுத்த வீரர்களுக்கு நன்றி கூறிய வாலிபர்

மோதிரத்தை மீட்பதற்கெல்லாம் தீயணைப்பு வீரர்களை பயன்படுத்த முடியாது என்று தீயணைப்பு அதிகாரி கூறினார்.
ஆற்றில் விழுந்த காதல் சின்னம் - மீட்டு கொடுத்த வீரர்களுக்கு நன்றி கூறிய வாலிபர்
Published on

காதல்...

காதல் என்பது ஒரு சாதாரண உணர்வு மட்டும் இல்ல. அது மனித வாழ்க்கையை முழுவதும் மாற்றக்கூடிய ஒரு ஆழமான அனுபவம். அதுசில நேரங்களில் இனி மையான நினைவுகளை தரும். சில நேரங்களில் காயங்களையும் தரும்.

தற்போதைய காலக் கட்டத்தில் தங்களின் காதலை விட மற்றொரு நபரின் காதலுக்கு மரியாதை கொடுக்கக்கூடிய நபர்களை அதிகமாக பார்க்க முடியாது. ஆனால் ஒரு வாலிபர் ஆற்றில் குளித்தபோது தவறவிட்ட, அவரது காதல் சின்னமாக திகழ்ந்த மோதிரத்தை “ஸ்கூபா” வீரர்கள் கஷ்டப்பட்டு தேடி கண்டுபிடித்துக் கொடுத்துள்ள சம்பவம் கேரளாவில் அரங்கேறி உள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு:-

கேரளம் மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆராட்டுப்புழா பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் நாயர். காதல் திருமணம் செய்த இவர் சம்பவத்தன்று கல்லடா ஆற்றின் ஆராட்டுப்புழா படித்துறையில் குளிக்கச் சென்றார். அப்போது அவர் கையில் அணிந்திருந்த அவருடைய திருமண மோதிரம் ஆற்றுக்குள் விழுந்துவிட்டது.

ரஞ்சித் நாயர் தனது திருமணத்தின்போது தனது காதலி அணிந்த மோதிரத்தை காதலின் சின்னமாக கருதினார். அது ஆற்றுக்குள் விழுந்து விட்டதால் பதறிப்போனார். ஆற்றுக்குள் மூழ்கி எவ்வளவு தேடியும் அவரது மோதிரம் கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்வதென்று தவித்த அவர், தன்னுடைய காதல் மோதிரத்தை மீட்க தீயணைப்பு துறையினரின் உதவியை நாட முடிவு செய்தார்.

அவர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு சென்று அங்கிருந்த அதிகாரியிடம் தனது மோதிரம் ஆற்றுக்குள் விழுந்து விட்டதை கூறினார். ஆனால் மோதிரத்தை மீட்பதற்கெல்லாம் தீயணைப்பு வீரர்களை பயன்படுத்த முடியாது என்று தீயணைப்பு அதிகாரி கூறினார். ஆனால் ரஞ்சித் நாயர் விடுவதாக இல்லை.

“ஐயா... நான் காதலித்து திருமணம் செய்து கொண்டவன். திருமணத்தின்போது எனது காதலி எனக்கு அணிவித்த மோதிரம் என்னுடைய காதலின் சின்னம். அந்த மோதிரம் ஆற்றுக்குள் விழுந்து விட்டது. அது கிடைக்காமல் போய்விட்டால் எனது மூச்சை இழப்பது போல் இருக்கும்” என்று தனது காதலின் வலியை தீயணைப்பு அதிகாரியிடம் தெரிவித்தார்.

மனதை கசக்கும் வகையில் மிகவும் உருக்கமாக ரஞ்சித் நாயர் கூறிய வார்த்தைகள் தீயணைப்பு அதிகாரியை மனம் மாறச்செய்தது. அவரது உண்மையான காதல் உணர்வை புரிந்து கொண்ட தீயணைப்பு அதிகாரி அவருக்கு உதவ முன் வந்தார். அவர் உடனடியாக கொல்லத்தில் இருந்து தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 5 “ஸ்கூபா” வீரர்களை வரவழைத்தார்.

அவர்களுடன் ரஞ்சித் நாயர் மோதிரத்தை தொலைத்த கல்லடா ஆற்றுக்கு சென்றார். பின்பு தீயணைப்பு அதிகாரியின் உத்தரவின் பேரில் “ஸ்கூபா” வீரர்கள் ஆற்றுக்குள் இறங்கி காணாமல் போன ரஞ்சித் நாயகரின் மோதிரத்தை தேடத் தொடங்கினர்.

ஆற்றுக்குள் மூழ்கிய நிலையில் ஆற்றின் அடிப்பகுதியில் மணலை கிளறி மோதிரத்தை தேடினர். சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்குப் பிறகு ரஞ்சித் நாயரின் “காதல் மோதிரம்” கிடைத்தது. அதனை தீயணைப்பு அதிகாரி முன்னிலையில் ரஞ்சித் நாயரிடம் “ஸ்கூபா” வீரர்கள் ஒப்படைத்தனர்.

தனது உணர்வை புரிந்து கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு ஆற்றில் காணாமல் போன தனது காதல் சின்னமாக மோதிரத்தை மீட்டுக் கொடுத்த “ஸ்கூபா” வீரர்களுக்கும், தீயணைப்பு அதிகாரிக்கும் ரஞ்சித் நாயர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com