

2023 மார்ச் 5 அன்று லண்டனில் ராகுல் காந்தி ஆற்றிய உரையில், சவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி சாவர்க்கரின் பேரன் சத்யகி சவர்க்கர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் புனே சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் சாட்சியமளிக்கும் போது சில முக்கிய உண்மைகளை சத்யகி சவர்க்கர் ஒப்புக்கொண்டுள்ளார்.
ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் மிலிந்த் பவார் நடத்திய குறுக்கு விசாரணையின் போது பதிலளித்த சத்யகி சவர்க்கர்,
அந்தமான் செல்லுலார் சிறையில் இருந்தபோது, சவர்க்கர் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஐந்து முறை மன்னிப்புக் கடிதங்களை சமர்ப்பித்ததை சத்யகி ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், அந்த காலக்கட்டத்தில் பல அரசியல் கைதிகள் இது போன்ற கடிதங்களை எழுதியது வழக்கம் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
சவர்க்கர் பசுவை தெய்வமாக வழிபடவில்லை என்றும், அதை வெறும் "பயனுள்ள விலங்காக" மட்டுமே கருதினார் என்றும் சத்யகி கூறினார்.
பசுவை தெய்வமாகப் பார்க்கும் கருத்தாக்கத்துடன் சவர்க்கர் உடன்படவில்லை என்பதை தெரிவித்தார்.
மேலும், இரண்டாம் உலகப் போரின்போது இந்தியர்களை பிரிட்டிஷ் ராணுவத்தில் சேருமாறு சவர்க்கர் அழைப்பு விடுத்தார் என்றும் இந்தியா சுதந்திரம் அடையும் போது பயிற்சி பெற்ற ஒரு ராணுவம் நமக்குத் தேவை என்ற தொலைநோக்கு பார்வையில் அவர் இதைச் செய்ததாகவும் சத்யகி தெரிவித்தார்.