

ஆம் ஆத்மி மேல்சபை எம்.பி.க்கள் குழு துணைத் தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா சமீபத்தில் நீக்கப்பட்டார். இதனால் கட்சி தலைமை மீது அவர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தார்.
இதற்கிடையே ராகவ் சத்தா, சந்தீப் பாடக், அசோக் மித்தல், சுவாதி மாலிவால், ஹர்பஜன் சிங், ராஜேந்திர குப்தா, விக்ரம் ஷைனி ஆகிய 7 மேல்சபை எம்.பி.க்கள் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து திடீரென விலகினர். அவர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
மேல்சபையில் ஆம் ஆத்மி கட்சிக்கு 10 எம்.பி.க்கள் உள்ளனர். அதில் 3-ல் இரண்டு பங்கு எம்.பி.க்கள் கட்சியில் இருந்து விலகுவது தொடர்பான கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். கட்சியில் இருந்து விலகுவது தொடர்பான ஆவணத்தை மேல்சபை தலைவரிடம் அவர்கள் அளித்துள்ளனர்.
7 மேல்சபை எம்.பி.க்களும் பா.ஜ.க.வில் இணைவதற்கான கடிதம் மேல்சபை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் சிங் மாநிலங்களவை தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், கட்சியை விட்டு வெளியேறிய 7 எம்.பி.க்களை தகுதிநீக்கம் செய்யவேண்டும். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தாலும் கூட சட்டரீதியான அங்கீகாரம் எதுவும் கிடைக்காது என தெரிவித்துள்ளார்.